தனியார் மூலதனங்களைக் கவர்ந்திழுப்பதில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக அடிக்கடி கருணாநிதி பெருமைப்பட்டுக் கொள்வார். ஆனால் கொண்டு குவிக்கப்படும் பன்னாட்டு தனியார் முலதங்கள் உள்ளூர் மக்களின் வாழ்வை சூறையாடி வருகிறது. சிறு தொழில் நசிவும் வேலை இழப்பு, உணவுப் பற்றாக்குறை என ஏழை எளிய மக்கள் மிகப்பெரும் இழப்புகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இது கிராமப்புறங்களில் பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. கிராமங்களை காலி செய்து உதிரி வேலைகளுக்காக நகரங்களுக்கு இடம்பெயர்வது. ஆனால் அங்கிருந்தும் துரத்தப்பட்டு வெளியேற்றப்படுவது என தனியார் மயத்தின் கோரமுகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொலை,கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தோடு கூடவே குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தில் இரண்டு குடும்பங்கள் கடன்சுமை காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அதன் இன்னொரு வெளிப்பாடாக மயிலாடுதுறையில் தாயைக் கவனிக்க முடியாத மகன் தாயையே கொன்று போலீசிலும் சரணடைந்திருக்கிறார். நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் சித்தர்காடு பாரதிநகர் புதுத்தெருவில் வசிப்பவர் பனை ஏறும் தொழிலாளியான அருளானந்தம் (44). இவரது தாய் செபஸ்தியம்மாள் (85). கடந்த சில மாதங்களாக அருளானந்தம் பணக் கஷ்டத்தில் இருந்து வந்தார். இதனால் தன் தாய் செபஸ்தியம்மாளை அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை.இதனால் அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்த செபஸ்தியம்மாளை ஈவு இரக்கமின்றி கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் அந்த மூதாட்டியின் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அருளானந்தம் துண்டிக்கப்பட்ட தன் தாயின் தலையை ஒரு பையில் எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தார். இதை பார்த்து பயந்த அக்கம்பக்கத்தினர் அலறினார்கள். இதையடுத்து அவர் தலையை வீட்டுக்குள் எறிந்து விட்டு கிராம நிர்வாக அதிகாரி குருநாதன் முன்னிலையில் சரண் அடைந்தார்.