தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்தியாவில் அஸ்ஸாம், மேற்குவங்கம், கேரளம், தமிழகம், புதுச்சேரி என நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட தலைமை தேர்தல் அதிகாரி சுனி அரோரா ”தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் ஒட்டு மொத்தமாக உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும். தேர்தல் அறிவிக்கை மார்ச் 12, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19 , வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20, வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22, வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும். காலியாகவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இதே அட்டவணையில் தேர்தல் நடத்தப்படும்.
ஆனால் வெறும் 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். அனைத்து மாநில சட்டப்பேரவைகளின் வாக்கு எண்ணிக்கைகளும் நடத்தப்பட்டு மே, 2-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் செலவின வரம்புத்தொகை, புதுச்சேரியில் தொகுதிக்கு 22 லட்சம் எனவும் மற்ற மாநில சட்டமன்றங்களில் தொகுதிக்கு ரூ. 38 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.