Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழகத்தை மாவோயிஸ்ட் வன்முறைப் பகுதியாக மாற்ற முனைகிறார்கள்- கருணாநிதி குற்றச்சாட்டு.

இது

குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகபோர்முனைக்கு வாருங்கள்என்று தி.மு..வோ, தி..வோ ஒருபோதும் மக்களைத் திரட்டியதில்லை. எந்தப் பிரச்னைக்காக போராட்டம் நடத்தினாலும் அதற்கான கிளர்ச்சியை அமைதியான முறையில், அறவழியில் நடத்தி பழக்கப்பட்டவர்கள் நாங்கள். 1938-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது சென்னை தொண்டை மண்டல உயர் நிலைப் பள்ளி வாயிலில் அமைதியான முறையில் மறியல் செய்து கைதானர்களே தவிர, முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நமது கம்யூனிஸ்ட்டுகள் நடத்தும் கிளர்ச்சி எதுவாயினும், அதற்கு ஒரு போர்க்கள முத்திரையை குத்தாமல் இருக்க மாட்டார்கள். முதலில் ஊர்வலம் என்பார்கள்; பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் என்பார்கள்; அதற்கடுத்து மறியல் என்பார்கள்; அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலக முற்றுகை என்பார்கள். ஒரு அரசு இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அணிவகுத்து வரும் அவர்களின் படைக்கு முரசு கொட்டி வரவேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இப்படித்தான் கம்யூனிஸ்ட்களுடைய கிளர்ச்சிகள் கோரிக்கை பேரணிகளாககோட்டை முற்றுகைஎன்ற அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. அவர்கள் வைத்த கொள்ளிதான் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதல், அராஜகம், உயிர்ப் பலிகள் என்ற அளவுக்கு கொழுந்து விட்டு எரிகிற காட்சியைப் பார்க்கிறோம். தமிழகத்திலும் அத்தகைய அராஜகங்களை, வன்முறை சேட்டைகளை, கொலை வெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டு வருகிறார்கள். திமுகவுக்கு ஒரு சிறு களங்கத்தையாவது ஏற்படுத்தினால்தான் அதனை வைத்துக் கொண்டு தேர்தலில் நிற்கவோ அல்லது தங்களது கூட்டணித் தலைவி வெற்றி வாகை சூட முடியும் என்ற எதிர்பார்ப்போடு திட்டங்களை, தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர். “சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி திங்கள்கிழமை நடத்த திட்மிட்டிருந்த கோட்டை முற்றுகை போராட்டத்தை அரசு தடுத்தி நிறுத்திவிட்டதுஎன்று கம்யூனிஸ்ட்டுகள் அறிக்கை விட்டுள்ளனர். அவர்கள் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்துவார்களாம்; அதனை அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு விருந்து வைத்து மகிழ வேண்டுமாம். 27 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. தொகுப்பூதியத்தில் இருப்பவர்களை, பகுதி நேர ஊழியர்களை நிரந்தரம் செய்ய மேற்கு வங்கம் அல்லது கேரளத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அரசுகள் முன் வந்தது உண்டா? ஆனால், “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டிஎன்ற கதையாக தமிழகத்தில் மட்டும் பணி நிரந்தரம் செய்யுமாறு முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். காவலர்கள் அதனைத் தடுத்தால், அங்கே ஏற்படுகிற தகராறை பெரிதுபடுத்திதமிழக அரசின் உச்சகட்ட அராஜகம்என்று பேசுவதும், எழுதுவதும் எந்த வகையில் ஜனநாயகம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும், அவர்களின் கோரிக்கையை ஏற்று சத்துணவு ஊழியர்களுக்கு மூன்று முறை ஊதிய உயர்வு, சிறப்பு காலமுறை ஊதியம், வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, பண்டிகை கால முன் பணம், ஓய்வூதியம், பதவி உயர்வு, பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம், சிறப்பு சேமநல நிதித் திட்டம், குடும்ப நலத் திட்டம், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மகப்பேறு விடுப்பு, கோடை விடுமுறை காலத்தில் ஊதியம், பயணப்படி ஆகிய சலுகைகள் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளன. இந்த அளவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கோட்டை முற்றுகைப் போராட்டம் என்று சொல்வது நியாயம்தானா? சத்துணவு பணியாளர்கள் பிரச்னையில் அந்த அளவுக்கு என்ன நடந்து விட்டது? அதிமுக ஆட்சியைப் போல எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் கொண்டு வரப்பட்டதா? இரவோடு இரவாக அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டது, லட்சக்கணக்கானோர் பணி நீக்கம் செய்யப்பட்டது போன்று ஏதாவது நடந்து விட்டதா? எதற்காக முற்றுகைப் போராட்டம்? 21-11-2009 அன்று எனக்கு பாராட்டு விழா நடத்திய சத்துணவு பணியாளர் சங்கத்தினர் இந்த உண்மையை அறிய மாட்டார்களா? சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டபோது சட்டப் பேரவையில் கம்யூனிஸ்ட்டுகள் பாராட்டி பேசியது அவைக் குறிப்பில் உள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், சத்துணவுப் பணியாளர்களுக்கு இந்த அரசின் மீது எந்தக் குறையும் இல்லை. அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒரு சில சங்கத்தினர் மட்டும் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும், கோயில்களைப் பார்த்து வரலாம் என்று ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வந்து விடுகின்றனர். பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னையோ, அமைச்சர்களையோ அணுகி சலுகைகளைப் பெறுகிறார்கள். இந்த அரசுக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Exit mobile version