தமிழகத்தில் பின் தங்கிய பகுதிகளில் சிசுக்கொலை எண்பதுகள் வரை நடந்து வந்தது. பொருளாதார நெருக்கடி, பெண் குழந்தைகளுக்கு அதிக அளவு நடத்தப்படும் சடங்குகள், பெண் குழந்தை என்றாலே செலவு என்று பார்க்கப்படும் பார்வை என பல காரணங்கள் பெண் குழந்தைகள் கொல்லப்படும் நிகழ்வுக்குப் பின்னால் இருந்தது.
எண்பதுகளில் இருந்த இந்த பழக்கம் இடையில் சில காலம் இல்லாமல் இருந்தது. ஆனால், பொருளாதார நெருக்கடி மீண்டும் அதிகரித்து வரும் இக்காலத்தில் மீண்டும் பெண் சிசுக்கொலை அதிகரிக்கிறது. செக்கானூரணியைச் புள்ள நேரி கிராமத்தைச் சேர்ந்த வைரமுருகந் சௌம்பா தம்பதிகள்தங்கள் பெண் குழந்தையை சிசுக்கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் இப்போது மதுரை உசிலம்பட்டியில் தங்கள் குழந்தையை மூச்சுத் திணறவைத்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை உருவாக்கியிருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கனூர் அருகில் உள்ள கே. பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி, சிவப்பிரியா தம்பதிகளுக்கு ஏற்கனவே இரண்டு பெண் மகள்கள் உள்ளார்கள்.
இந்நிலையில் மூன்றாவதும் சிவபிரியா கர்ப்பமானார் கடந்த வாரம் பழனிபாப்பம்பட்டி அரசு மருத்துவமனையில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்தது. கடந்த புதன் கிழமை குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அந்த குழந்தை இறந்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்களுக்கு குழந்தையின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. உடல் நிலை ஆரோக்கியமாக இருந்த குழந்தை மூச்சுத் திணறி இறந்தது போல இருக்க அக்குழந்தையை மேலும் பல விதமான சோதனைகளுக்கு உள்ளாக்கி இருந்தனர். அப்போது குழந்தையின் முகத்தில் நகக்கீறல்கள் இருந்ததையும் கண்டு பிடித்தனர்.
சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் சொல்ல காவல்துறை வந்து குழந்தையின் உடலை பிரதேசப்பரிசோதனைக்கு அனுப்பினார்கள். அதில் குழந்தை மூச்சுத் திணறடிக்க வைத்து கொன்றிருப்பது தெரிய வந்தது. அதனையொட்டி பெற்றோர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டு பெற்றோர்கள் இருவரையும் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.