அருந்ததியர்கள் மீதான தாக்குதலை அரசு வேடிக்கை பார்க்கிறது என ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான் தெரிவித்தார். பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் வரலாறு மீட்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டுக்கு தலைமை வகித்து இரா.அதியமான் மேலும் பேசியது: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அருந்ததிய சமுதாயத்தைச் கூட்டம் கூட்ட மட்டுமே பயன்படுத்துகின்றன. அண்மையில் கோயம்புத்தூர்,திருச்சியில் கூடிய கூட்டம் இதற்கு உதாரணமாகும். 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட இச் சமுதாயத்துக்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றி யாரும் பேச முன்வருவதில்லை. தொழிற்சங்கங்களும் அருந்ததிய மக்களின் பிரச்னைகளை பற்றி புரிந்து கொள்வதில் குழம்புகின்றன. இதுவரை எழுதப்பட்ட வரலாற்றில் அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த வீரர்கள்,தியாகிகள் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை வீரனாகவோ, தலைவராகவோ எழுதுவதற்கு யாருக்கும் மனம் வருவதில்லை. அதோடு மட்டுமன்றி சில இடங்களில் அருந்ததியர்களின் வரலாறு மறக்கடிக்கப்பட்டும், சில இடங்களில் எழுதப்படாமலும் விடப்பட்டுள்ளன. அம்பேத்கர் பெற்ற இரட்டை வாக்குரிமை செயல்படுத்தப்பட்டிருந்தால், அரசியல் களமே மாறியிருக்கும். தனித் தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள், அவர்கள் அரசியல் கட்சியின் தலைமைக்கு கீழ்படிந்தே உள்ளனர். இந் நாட்டில் எங்களுடைய உரிமையைத்தான் கேட்கிறோம். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், சாக்கடைக் குழிக்குள் இறங்கி நம்மை சுத்தம் செய்ய இந்த அரசு நிர்பந்திக்கிறது. முதலில் அருந்ததிய சமுதாயமக்கள்,தாங்கள் செய்யும் இழிவுத் தொழிலை விட்டு மீட்டெழுத்து வந்தால்தான் முன்னேற முடியும். ஆதிக்க சாதியினர்,அருந்ததியரைத் தாக்கினாலும் வழக்கு போடப்படுவதில்லை. மாறாக புகார் கொடுத்தவர் மீது வழக்குப் பதியப்படுகிறது. இதன் காரணமாக அருந்ததியர்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கத்தான் செய்கிறது. அரசு இதை வேடிக்கை பார்க்கிறது. இப் பிரச்னைகளில் இருந்து எழுந்து வருவதற்கும், அருந்ததிய சமுதாய மக்கள் அவர்கள் தொழிலை விட்டு வெளியே வருவதற்கும் விரைவில் சமூக இழிவு ஒழிப்பு பிரகடன மாநாடு நடத்தப்படும். இம் மாநாட்டில் இழி தொழில் வெளியேறுவது குறித்து பிரகடனப்படுத்தப்படும் என்றார் அதியமான்.