Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கூடாது- பா.ஜ.க. தெரிவிப்பு!

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் இனமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வரும் இலங்கைக்கு துணை போவதற்கு இந்த நிலைப்பாடு சாதகமாகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக பா.ஜ.க.வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சித் தலைமையகமான கமலாலயத்தில் தலைவர் இல. கணேசன் தலைமையில் நேற்று நடந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் அங்கு கூறியதாவது:

இலங்கையின் பூர்வீக இனமான தமிழர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலையை இந்திய மத்திய, மாநில அரசுகள் அமைத்துத்தர வேண்டும்.

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கடந்த 10 மாதங்களாக தாக்கவில்லை என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. சோனியா காந்திக்கு தமிழர்கள் மீதுள்ள வெறுப்பு காரணமாகவே, இலங்கைக்கு, மத்திய அரசு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது. இலங்கையில் முள்வேலிக்குள் அடைபட்டிருக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிய பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி. குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்ற வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பு கருதி கச்சதீவை இந்தியா மீட்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் செயற்குழுவில் எடுக்கப்பட்டுள்ளன என்றார்

Exit mobile version