Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழகத்திலிருந்து நாடு திரும்ப மறுக்கும் அகதிகள்

tamil-refugeesஇந்தியாவில் தங்கியிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பெரும் எண்ணிக்கையிலான இலங்கை அகதிகள் மீளவும் நாடு திரும்புவதனை நிராகரித் துள்ளதாக புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு முடிவுறுத்தப்பட்ட மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது 102526 அகதிகள் இந்தியாவிற்கு சென்று அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடமிருந்த பெற்றுக்கொள்ளப்பட்ட புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் இதனைக் குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ளார். 110 அகதி முகாம்களில் 68055 அகதிகள் வாழ்ந்து வருவதுடன், 34471 பேர் உறவினர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், இதுவரையில் ஆறாயிரம் பேர் மட்டுமே நாடு திரும்பியுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரையில் 200 அகதிகள் மட்டுமே நாடு திரும்பியுள்ளதாகவும் அவர்கள் மீள் குடியேற்றப்பட்டு உள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமாதானம் நிலவுவதாகக் கூறப்படும் வடக்கிலும் கிழக்கிலும் அடிபடை உரிமைகள் கூடத் தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. இனச்சுத்திகரிப்புத் தொடர்கிறது. தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழர்கள் இன்னும் ஒடுக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் அவர்கள் இலங்கைக்கு நாடு திரும்பவில்லை என அமைச்சர் குறிப்பிடவில்லை. தவிர,தமிழ் நாட்டில் வாழும் அகதிகள் மிருகங்களுக்கு அமைக்கப்படும் தொழுவங்கள் போன்ற கொட்டகைகளில் கியூ பிரிவின் கண்காணிப்பின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது சந்தத்திக் குழந்தைகள் பலர் சிறை முகாம்களிலேயே வளர்ந்து பெரியவர்களாகியுள்ளார்கள். ஈழத் தமிழர் வியாபாரம் நடத்தும் ஊணர்வாளர் குழுக்கள் இந்த அகதிகளுக்காகக் குரல் கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version