சர்வாதிகாரி மகிந்த ராஜபக்சவின் அரசு பதவியிறக்கப்பட்டதும் அறுபது வருடத்திற்கும் மேலான பெருந்தேசிய ஒடுக்குமுறை அகன்று போய்விட்டது என்ற தோற்றப்பாட்டை வழங்க முற்படுகின்ற அதிகார வர்க்கம் அகதிகளைத் திருப்பி அனுப்பலாம் என்கிறது.
இலங்கையில் ராஜபக்ச அரசில் அங்கம் வகித்த அதே நபர்களால் புதிய அரசு பதவியேற்று பத்து நாட்கள் கடந்துவிட முன்னரே அகதிகளை அனுப்பிவிடலாம் என்கிறார்கள்.
இலங்கையில் ‘அமைதி நிலை’ திரும்பிவிட்டதா அல்லது புதிய வழிகளில் மக்கள் மீதான பயங்கரவாதம் ஆரம்பித்துள்ளதா என அனுமானிப்பதற்கு முன்பே அகதிகளை அள்ளி பாக்கு நீரணையில் வீசிவிடலாம் என இந்திய இலங்கை அதிகாரவர்கங்கள் அவசரப்படுகின்றன.
எல்லாம் சரியாகிவிட்டதே எப்போது நாடு திரும்பப் போகிறீர்கள் என அக்கம்பக்கத்தாரிலிருந்து அதிகாரிகள் வரை அகதிகளைக் கேட்டுத் தொலைக்கிறார்கள். தமிழகத்தில் முகாம்களுக்கு வெளியில் அகதிகளாக வாழ்பவர்களை விட முகாம்களுள் முடக்கப்பட்டுள்ள அகதிகளின் தொகை எழுபதாயிரத்தைத் தாண்டும் எனக் கணிப்புக்கள் கூறுகின்றன.
கியூ பிரிவின் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்படும் இந்த அகதி முகாம்கள் பலவற்றில் பிறந்து வளர்ந்த இரண்டாவது தலைமுறை கூட இலங்கை அகதிகளாகவே கணிக்கப்படுகின்றனர். தமிழக அரசோ, இந்திய அரசோ இவர்களுக்குப் குடியுரிமை வழங்கவில்லை. தற்காலிகமாக வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கான சலுகைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
இந்திய மக்கள் குடியிருப்புக்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வேறான கிராமங்கள் போல இயங்கி வரும் இந்த முகாம்கள் தமிழ் நாட்டு அரசுகளின் முகங்களைக் காட்டும் கண்ணாடிகள்.
வார்த்தைக்கு ஒரு முறை மீசை துடிக்க, கண்ணீர் வடிய, நரம்பு புடைக்க தமிழினம் என்று கூச்சலிடும் பிழைப்புவாத அரசியல்வாதிகளின் போலி விம்பத்தைக் காட்டிநிற்பவை அவலங்கள் சூழந்த அந்த முகாம்கள். தமிழீழம் பிடித்துத் தருவதாக பணத்தைப் பிடித்து சட்டைப்பைகளுக்குள் திணித்துக்கொள்ளும் இந்த நயவஞ்சகக் கூட்டங்கள் இணைந்து குரலெழுப்பியிருந்தாலே முப்பது வருடமாக தமிழ்க் குழந்தைகள் தனிமையில் வளர்ந்திருக்க மாட்டார்கள்.
பள்ளிகூட அனுமதி, மேற்படிப்பிற்குத் தடை, வேலை பெற்றுக்கொள்ள தடை என்று மனித குலத்திற்கே விரோதமாக இவர்கள் நடத்தப்பட்டுள்ளனர்.
இவை அனைத்துக்கும் மத்தியில் தமிழ் நாட்டிலேயே இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகியுள்ளனர். தமிழ் நாட்டுத் தமிழையே இவர்கள் பேசுகின்றனர். நடை, உடை, கலாச்சாரம் ஆகிய அனைத்திலும் ஈழத்தமிழர்களிலிருந்து வேறுபட்டுள்ளனர்.
ஒரு பேச்சுக்கு இலங்கையில் எல்லாமே வழமைக்குத் திரும்பிவிட்டது என்றாலும், அன்னிய தேசம் ஒன்றிற்கு அகதிகளாகச் செல்பவர்கள் போன்றே புதிய சந்ததி உணர்ந்துகொள்ளும்.
ஆக, அகதிகள் என்று அழைக்கப்பபவர்களைத் திருப்பி அனுப்புவதற்குப் பதிலாக அவர்களின் குடியுரிமைக்காகப் போராடுவதே இன்றைய அவசரத் தேவை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நாட்டில் வாழ்பவர்களை அன்னியர்கள் போல நடத்தும் இந்திய மற்றும் தமிழக அரசுகளின் சமூக விரோத நடவடிக்கை அம்பலப்படுத்தப்பட வேண்டும்.
மனித குலத்தின் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு அகதிகளுக்கு வாழ்வதற்கான உரிமை இந்தியாவில் வழங்கப்பட்ட பின்னர் இலங்கைக்குத் திரும்பிச் செல்வது என்பது ‘அகதிகளின்’ தனிப்பட்ட விருப்பத்திற்கு உட்பட்டது. அது அதிகாரவர்க்கக் கும்பல்களின் தனிப்பட்ட விருப்புக்கு உட்பட்டதல்ல.