Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமக்கு மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்பது புலிகளுக்கு புரியாத விடயமாகவேயுள்ளது:அமைச்சர் டியூ குணசேகர .

06.11.2008.

விடுதலைப்புலிகள் கூட தமது நோக்கங்களைக் கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏனெனில், அவர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு இல்லை. அத்துடன், புலிகளின் நோக்கங்களிலும் நெகிழ்வுத் தன்மை இல்லை. தமக்கு மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்பது புலிகளுக்கு புரியாத விடயமாகவேயுள்ளது.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் டியூ குணசேகர அவர் மேலும் கூறியதாவது; 

“பயங்கரவாத அமைப்புகள் தொடர்பாக அமெரிக்காவிலுள்ள ரெண்டி கோப்பரேஷனும் பயங்கரவாதத்தை தவிர்ப்பதற்கான நிறுவகமும் ஆய்வொன்றை நடத்தின. இந்த ஆய்வின்படி, கடந்த 40 ஆண்டு காலப்பகுதியில் உலகில் 624 பயங்கரவாத அமைப்புகள் செயற்பட்டமை தெரியவந்துள்ளது.

இந்த 624 பயங்கரவாத அமைப்புகளில் 10 அமைப்புகள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. 268 அமைப்புகள் இடைநடுவில் செயலிழந்துவிட்டன. 136 அமைப்புகள் சிதைந்துவிட்டன. 7 சதவீதமானவை யுத்தம் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளன. 144 அமைப்புகள் தற்போதும் செயற்பட்டு வருகின்றன.

இவற்றில் எஞ்சியவை பேச்சுவார்த்தைகள் மூலம் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளன. இந்த காலகட்டத்தில் வெற்றிபெற்ற பயங்கரவாத அமைப்புகளோ, இராணுவமோ, மக்கள் ஒத்துழைப்புடனேயே தமது இலக்கை அடைந்துள்ளன.

அதேவேளை, மதத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள் எதுவும் இன்றுவரை வெற்றிபெற்றதில்லை.

இதேவேளை, தமிழக கொந்தளிப்புகளின் பின்னணியில் யாரோ உள்ளனர். அவர்கள் இலங்கையிலோ இந்தியாவிலோ இருக்கலாம். அவர்களை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.

இலங்கையின் உள்விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடாது. ஆனால், எமது பிரச்சினையில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதை தவிர்க்கவும் முடியாது.

Exit mobile version