இலங்கை ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது புலிகளின் 4 படகுகள் அழிக்கப்பட்டன.
இத் தகவலை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் நிர்வாக தலைமையகமாக திகழ்ந்த கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் மூத்த தலைவர்கள் அனைவரும் தங்களது முகாமை முல்லைத்தீவுக்கு மாற்றிவிட்டனர் என்று கூறப்பட்டது.
தற்போது ராணுவம் முல்லைத்தீவில் நுழைந்துள்ளது. முல்லைத்தீவில் ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் பிரபாகரன் அல்லது விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் யாராவது கடல்வழியாகத் தப்பிச் செல்வதைத் தடுக்க முல்லைத்தீவு கடல் பகுதியை இலங்கை கடற்படை சுற்றிவளைத்துள்ளது.
அதிநவீன படகுகள், ரேடார்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்கள் மூலம் 24 மணி நேரமும் இலங்கை கடற்படை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
முல்லைத்தீவு கடற்கரையைச் சுற்றி 25 கடல்மைல் தொலைவுக்கு நான்கு அடுக்கு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முல்லைத்தீவிலிருந்து 4 படகுகளில் விடுதலைப் புலிகள் தப்பிச் செல்ல முயன்றதாகவும் ஆனால் அவர்களது முயற்சியை முறியடித்து விட்டதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகச் செய்திக் குறிப்பு கூறுகிறது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் நடந்த கடும் சண்டையில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான படகும் சேதமடைந்தது.