அண்டை நாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக யுத்தம் செய்து பெற்ற வெற்றியை போன்று உள்நாட்டு யுத்த வெற்றியை கொண்டாடுபவர்கள், இந்த யுத்த வெற்றியின் பின்னால் மறைந்து நிற்கும் மனதை கொல்லும் சோகத்தை அங்கீகரிக்க மறுக்கின்றார்கள். அதனால் யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், உயிரிழந்த தமது அந்த உறவுகளை நினைவு கூறுவதற்கும் உரிமைகளை இழந்து நிற்கிறார்கள்.
இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து யுத்தம் நடத்திவிட்டு, இவ்வாரம் கொழும்பில் நடைபெறும் வெற்றி விழாவிலும் கலந்துகொள்ளும் இந்தியா, அமெரிக்கா மற்றும் உலக நாட்டு அரசாங்க பிரதிநிதிகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற ஆயத்தப்படுத்தப்படும் தேசிய வெற்றி விழா நிகழ்வுகள் பற்றி கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
நான்கு வருடங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்த யுத்தத்தை நாங்கள் மறக்க நினைக்கின்றோம். ஆனால் அதை வருடா வருடம் ஞாபகப்படுத்தி இந்த அரசாங்கம் அரசியல் செய்கிறது. யுத்தம் நடத்தியவர்களது கோணத்தில் பாத்தாலும்கூட, யுத்தத்தை நடத்திய அன்றைய இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்த வெற்றி விழாவில் இடம் இல்லை.
இதன்மூலம் இந்த வெற்றி விழாவை இந்த அரசாங்கம் தனது சொந்த வெற்றியாக அரசியல் இலாப கண்ணோட்டத்தில் நடத்துகின்றது என்பது தெளிவாகின்றது.
ஆகவே தனது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக யுத்தத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் நினைவுகளை இந்த அரசாங்கம் துச்சமாக நினைக்கின்றதும் தெளிவாகின்றது.
அதேபோல் இவர்கள் வெற்றிவிழா கொண்டாடும் அதேவேளையில் தங்கள் உறவுகளை இழந்து வாழ்பவர்களுக்கு, இறந்து போனவர்களை நினைந்து நிகழ்வுகள் நடத்தவும் உரிமை மறுக்கப்படுகின்றது. இதன்மூலம் இந்த அரசாங்கம் இறந்து போனவர்களை அவமரியாதை செய்கின்றதும் தெளிவாகின்றது.
இந்த பின்னணியில் இந்த அரசாங்கம் நடத்தும் யுத்த வெற்றி விழாவில் கலந்துகொண்டு, இந்த விழாவுக்கு அங்கீகாரம் தந்து சிறப்பிக்க போகும் தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகள் யார் என்பதையும், சர்வதேச சமூக பிரதிநிதிகள் யார் என்பதையும் இலங்கை வாழ் தமிழ் மக்களும், நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களும் எதிர்நோக்கி இருக்கின்றார்கள்.