தனி ஈழம் பற்றி பேச திமுக தலைவர் கருணாநிதிக்கு எந்த தகுதியும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தர்மபுரியில் மதிமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
இலங்கையில் தமிழர்களை அழிக்க பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்தது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகளும் அதற்கு துணைநின்றன. இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியபோதும் சரி, படுகொலைகள் நடந்தபோதும் சரி அவற்றைத் தடுத்த நிறுத்த குரல் கொடுக்காமல் மௌனமாக இருந்தார் கருணாநிதி.
அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு தற்போது தனி ஈழம் அமைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுகிறார். தனி ஈழம் குறித்துப் பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தி்ல் மனு தாக்கல் செய்துள்ளார். அதை எதிர்த்து நாங்கள் வாதிட்டோம். அதன் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஈழக் கனவான்களின் கடந்தகாலக் காட்டிக்கொடுப்புக்கள் ஒரு புறம் கல்வெட்டுக்களாக அறையப்பட்டிருக்க மறுபுறத்தில் தமிழ் நாட்டில் ஈழ அகதிகள் மிருகங்கள் போன்று நடத்தப்படுவதை இவர்கள் கண்டு கொள்வதில்லை. செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் தொடர்கிறது.