எதிர்வரும் மாதம் நடைபெறும் டெசோ மாநாடு குறித்து இரு தலைவர்களும் அதன்போது ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போது, தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
டெசோ அமைப்பில் ஏன் இணைந்திருக்கிறோம் என்றால் அதில் தனி ஈழம் வலியுறுத்தப்படுகிறது. அதற்காகவே டெசோ அமைப்பில் உள்ளோம்.
தமிழ் ஈழத்தை ஆதரித்து அ.தி.மு.க. குழு அமைத்து அதில் பங்கேற்க என்னை அழைத்து நான் மறுத்தால் என்னை விமர்சனம் செய்யலாம். தமிழ் ஈழம் எங்கு வலியுறுத்தப்படுகிறதோ அங்கு நாம் உள்ளோம். என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் இந்திய மத்திய அரசை அச்சுறுத்துவதற்காகவே திமுக தலைவர் மு.கருணாநிதி டெசோ எனப்படும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்துவதாக தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.