Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தனிச்சிங்கள தேசிய கீதத்திற்காக அரச பாசிசம் நடத்திய கொலை – மறுக்கும் அமைச்சர்.

வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம்; யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்பு வைபவத்தில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாடவேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற கருத்தினை ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல மறுத்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலயிடம் ஊடகவியலாளர் ஒருவர், அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் தேசிய கீதத்தை பாடமுடியும் என நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்.

எனினும் தேசிய பாதுகாப்பு தினம் தொடர்பாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடவேண்டும் என்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்திற்கு வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம் தனது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தார் எனச் சுட்டிக்காட்டிய போதே அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

தேசிய கீதம் அரசியலமைப்பிற்கு முரணாக பாடப்பட்டிருந்தால் அதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும். மேற்குறிப்பிட்ட கருத்தை இந்தியாவின் எம்.ஆர்.ஐ. அமைப்பும் நீங்களும் மட்டுமே தெரிவித்துள்ளீர்கள். அதற்கு நான் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எம்.ஆர்.ஐ. அமைப்பு கண்டுபிடிக்கமுடியாத அமைப்பாக இருக்கிறன்றது எனவும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு வைபவத்தில் தமிழில் தேசிய கீதத்தினைப் பாடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அது மாற்றம் செய்யப்பட்டு சிங்களத்தில் தேசிய கீதம் பாடப்பட்டது. இதனை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்திருந்தார் வலிகாமம் உதவிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம். இந்த நிலையிலேயே அவர் வானில் வந்த இனந்தெரியாதவர்களால் வீட்டில் வைத்துச் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடவேண்டும் என்ற கருத்திற்கு மறுப்புத் தெரிவித்தமையே அவரது கொலைக்கான காரணமாக கருதப்பட்டு வருகிறது.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பல கொலைகளும் கடத்தல்களும் கொள்ளைச் சமப்வங்களும் அதிகரித்துள்ளன. இதன் பின்னணியில் இயங்குபவர்கள் பலத்த இராணுவ பாதுகாப்பிற்கு மத்தியில் சுதந்திரமாகச் செயற்பட்டு வருகிறார்கள் என்பது யாழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினைத் தோற்றுவித்திருக்கிறது. இதே வேளை முன்னாள் புலிப்போராளிகளே இவ்வாறான சம்வபங்களில் ஈடுபடுவதாக இராணுவத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version