இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பல்வேறு வளரும் நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. அவ்வாறு உடன்பாடு எட்டப்பட்டால் தங்கள் நாடுகளிலுள்ள நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படும் என்பதால் அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகள் அதற்கு உடன்பட மறுக்கின்றன.
ஆனால் வெப்பமயமாதல் பிரச்சனையில் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளரும் நாடுகளில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களுமே வலியுறுத்தி வருகின்றனர். முட்டுக்கட்டையாக தாங்கள்தான் இருக்கிறோம் என்பது அம்பலமாகி வருவதால் பிரச்சனையைத் திசைதிருப்ப தனக்கு சாதகமாக நாடுகளை அணிதிரட்டி சுற்றுச்சூழல் பற்றிப் பேசப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த மாத இறுதிக்குள் 17 நாடுகள் கொண்ட கூட்டம் ஒன்றை அமெரிக்கா நடத்தப்போகிறது. வளரும் நாடுகளின் நிர்ப்பந்தத்திலிருந்து எவ்வாறு வெளியே வரலாம் என்பதுதான் அவர்களது விவாதத்தின் மையக்கருவாக இருக்கப்போகிறது. இதற்காகக் கூட்டப்படும் கூட்டத்திற்கு பெரிய பொருளாதார நாடுகளின் அமைப்புக்கூட்டம் என்றும் பெயர் சூட்டியுள்ளார்கள்.
2011 ஆம் ஆண்டில் மீண்டும் உலக நாடுகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடக்கப்போகிறது. அதற்குள் தனக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியைத் திரட்டும் வேலையாகவே 17 நாடுகளைக் கொண்ட அமைப்பை அமெரிக்கா உருவாக்கிக் கொண்டிருக்கிறது. லண்டனில் தங்கள் அமைப்பின் முதல் கூட்டத்தை நடத்தப்போகிறார்கள்.