இலங்கை சர்வாதிகாரியும் இனக்கொலையாளியுமான கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சியில் மற்றுமொரு படுகொலை மகர சிறைச்சாலையில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட சம்பவம் மீதான அறிக்கை வெளியாகியுள்ளது. அதன் மீதான இரண்டாம் கட்ட நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கிய சம்பவங்கள் மறைக்கப்பட்டே இறுதி அறிக்கை வெளியானது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தனிமைப் படுத்தப்பட்ட சிறைக்கைதிகள் சிலர் தண்ணீர் கேட்டு மன்றாடியதாகவும், தாகம் தாங்க இயலாத நிலையில் சிறையின் பிரதான வாசலுக்கு வந்து அதிகாரிகளிடம் தண்ணீர் கேட்டதாகவும் பின்னதாக அவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது. தாகத்திற்குத் தண்ணீர் கேட்டவர்களைத் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்த கொடூரம் நிறுவனமயமன அரச பயங்கரவாதத்தின் ஒரு பகுதியே.
இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
புதிய இறுதி அறிக்கை இவை அனைத்தையும் மறைத்து சிறையில் ஏற்பட்ட கலவரத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினாலேயே கொலை நடைபெற்றது என்கிறது.
ஊழலுக்கு எதிரான ஆட்சியை நடத்துவது மட்டுமே தனது நோக்கம் என வாக்குச் சேகரித்து அதிகாரத்தைக் கையகப்படுத்தி தெற்காசியாவின் முழு அளவிலான சர்வாதிகாரியாக மாற்றமடைந்த கோத்தாபய ராஜபக்ச சர்வாதிகார அரசு இன்று சிங்கள மக்களின் தவிர்க்கமுடியாத எழுச்சியை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதுவே ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் இனவாதத்திற்கு எதிரான சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கையை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்கான பொருத்தமான சந்தர்ப்பம் என்பதை புதிய அரசியல் குழுக்கள் உணரும் காலம் தொலைவில் இல்லை.