Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தண்டவாளம் தகப்பு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்- நெடுமாறன் அறிக்கை.

விழுப்புரம்

அருகே இரயில்வே தண்டவாளம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட நிகழ்ச்சியையொட்டி தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பத்து இளைஞர்களைக் காவல்துறை கைதுசெய்து நான்கு நாட்களாக விசாரணை என்ற பெயரால் மறைத்து வைத்து, சட்ட விரோதமாக நடந்துகொண்டதை உயர்நீதிமன்றம் மிகக்கடுமையாகக் கண்டனம் செய்துள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழ்வேங்கை, ஜோதி நரசிம்மன், பாபு, எழில் இளங்கோ, ஏழுமலை, லலித்குமார், செயராமன், கணேசன், சிவராமன், சக்திவேல் உட்பட பத்து இளைஞர்களை ஜூன் 12ஆம் தேதியன்று காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் சென்றது. யாரை அழைத்துச் சென்றாலும், எங்கு வைத்திருக்கிறோம் என்பதை அவருடைய துணைவியாருக்கோ அல்லது குடும்பத்தாருக்கோ தெரிவிக்கவேண்டியது காவல்துறையினரின் சட்டப்படியான கடமையாகும். ஆனால் கடந்த நான்கு நாட்களாக அவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதே குடும்பத்தினருக்கோ அல்லது வழக்கறிஞர்களுக்கோ தெரியப்படுத்தாமல் இரகசிய விசாரணை என்ற பெயரால் காவல் துறை அத்துமீறியும், சட்டத்தைச் சிறிதும் மதிக்காமல் நடந்துகொண்டதை உயர்நீதிமன்றமே மிகக்கடுமையாகச் சாடியுள்ளதை நான் வரவேற்கிறேன்.மேற்கண்டத் தோழர்களின் சார்பில் ஆட்கொணர்வு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறகே அவர்களை அவசரஅவசரமாக காவல்துறை விடுதலை செய்துள்ளது. விடுவிக்கும்போது நடந்த உண்மைக்கு மாறாக எழுதிக்கொடுக்கும்படி அவர்களை காவல்துறை கட்டாயப்படுத்தியது. ஆனால் அவ்வாறு செய்ய உறுதியாக மறுத்துவிட்ட தோழர்களை மனமாறப் பாராட்டுகிறேன்.விழுப்புரம் குண்டுவெடிப்பு நிகழ்ச்சியில் காவல்துறையின் உயர் அதிகாரிகள் வெளியிட்டச் செய்திகளே ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. ஈழத்தமிழர்களின் ஆதர வாளர்கள் ஒருபோதும் மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதேயில்லை. ஈடுபடவும் மாட்டார்கள். அவர்கள் மக்களுக்காகப் போராடுபவர்கள். குண்டுவெடிப்பு நிகழ்ச்சியே ஒரு நாடகம் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மீண்டும் வளர்ந்துவரும் எழுச்சியைத் தடுத்து ஈழஆதரவாளர்களின் மீது கடும் ஒடுக்குமுறையை ஏவிவிடுவதற்கு வகுக்கப்பட்டத் திட்டமே இது. இதுபோன்ற பித்தலாட்டங்களின் மூலம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சியை ஒருபோதும் தடுத்துவிடமுடியாது என்பதை முதலமைச்சர் கருணாநிதி உணரவேண்டும். பெரு நெருப்பு என வளர்ந்து வரும் தமிழர் எழுச்சியை அணைக்க முயல்பவர்கள் யாராக இருந்தாலும் பொசுங்கிப் போவார்கள் என எச்சரிக்கிறேன்.

பழ.நெடுமாறன்
(
அமைப்பாளர்)

Exit mobile version