மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் உள்ள வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் நோக்கோடு கோடிக்கணக்கான பழங்குடி மக்களை காடுகளில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான போரை இந்தியா துவங்கியுள்ளது. பழங்குடி மக்களுக்காகப் போராடும் மாவொயிஸ்டுகளை அழித்து பழங்குடிகளை அப்புறப்படுத்தி தங்கு தடையின்றி கனிம வளங்களை சூறையாடுவதுதான் இந்திய தரகு முதலாளிகளின், பன்னாட்டு முதலாளிகளின் நோக்கம். இந்நிலையில் தண்டகாரண்யாவில் விமானத் தாக்குதலைத் துவங்கியுள்ளது இந்திய அரசு. மேற்கு வங்கத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அந்த அமைப்பின் முக்கியத் தலைவர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். சிஆர்பிஎப் கமாண்டர் ஒருவரும் உயிரிழந்தார். மேற்கு மேதினிபூர் மாவட்டம் மோதேரா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு வனப்பகுதிக்குச் சென்ற பாதுகாப்புப்படையினர், மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்டுகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. திங்கள்கிழமை விடியற்காலை வரை இந்தச் சண்டை நீடித்தது. இதில் மாவோயிஸ்டு இயக்கத்தின் முக்கியத் தலைவர் சித்து சோரன் கொல்லப்பட்டார். மாவோயிஸ்டுகளின் ஆதரவு பெற்ற, போலீஸ் அராஜகத்துக்கு எதிரான அமைப்பின் செயலாளராக சோரன் செயல்பட்டு வந்தார். மாவோயிஸ்டுகளுடனான் பல மணி நேர துப்பாக்கிச்சண்டையில் இவர்கள் கொல்லப்பட்டதாக அரசு சொன்னாலும் உண்மையில் தங்களின் முகாம்களில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் போராளிகளை கொன்று விட்டு ஆயுதங்களை வைத்து ஜோடித்த கதைகளை வெளியிட்டுள்ளது.