– இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
– தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்
– இலங்கையில் நடைபெறும் அநீதிகளை இந்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? ஈழத் தமிழர் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே தீர்மானித்துக் கொள்ள வகை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. மன்றத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்
– இலங்கையில் தமிழ் மொழி அடையாளங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்
– இன்றைய இலங்கையில் ராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. ராணுவ முகாமாக காட்சியளிக்கிறது இன்றைய தமிழீழம் தமிழர் பகுதிகளில் வலிந்து குடியமர்த்தப்பட்டுள்ள சிங்களர்களை உடனே வெளியேற்ற வேண்டும்
– தமிழர் பகுதியில் இயல்பு நிலை திரும்ப இலங்கை அரசை ஐ.நா. அவை வலியுறுத்த வேண்டும்
– அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்று சிறைகளில் வாடும் தமிழர்களை விடுதலை செய்வதில் ஐ.நா. அகதிகள் சபை தலையிட வேண்டும்
– இந்தியாவில் உள்ள அனைத்து இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை அல்லது அவர்கள் இந்தியாவில் நிரந்தரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும்
– அகதிகள் தொடர்பான ஐ.நா. வின் ஒப்பந்தத்தை இந்தியாவும் பின்பற்ற வேண்டும்
– ஐ.நா. மூலம் தமிழ் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் .ஈழத் தமிழர் பிரச்சனை தெற்காசிய பிரச்சனையாக அறிவிக்கப்பட வேண்டும்
– தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும்
– தமிழக மீனவர் படுகொலைக்கு முடிவுகட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும்
– தமிழகத்தின் மண்டபம் அல்லது தனுஷ்கோடியில் இந்திய கடற்படை முகாம் அமைக்க வேண்டும்
– தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஆமைக்க வெண்டும்.
– இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இலங்கை படையினருக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது
– டெசோ மாநாட்டில் பங்கேற்போரை கண்காணிப்போம் என்ற இலங்கை அரசின் மிரட்டலுக்கு கண்டனம்
– டெசோ மாநாட்டுக்கு தடை விதித்து இடையூறு செய்த அதிமுக அரசுக்கு கண்டனம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
ஐ.நா. தீர்மானத்துக்கும் பிறகும் தொடரும் அரச அடக்குமுறை: ஐ. நா. தலையிட கருணாநிதி வேண்டுகோள்
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும்கூட ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் அரச அடக்குமுறை தொடருகிறது. இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் மறுவாழ்வுக்காகவும் மனித உரிமைகளை காக்கவும் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் டெசோ மாநாட்டை முன்னிட்டு ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு ஆய்வரங்கத்தை இன்று காலை தொடங்கி வைத்து கருணாநிதி பேசியதாவது:
இலங்கையில் போருக்கு முன்பும், போருக்கு பின்பும் நடைபெற்று வரும் நிகழ்வுகளை கண்டு உலக நாடுகள் மிகவும் கவலை அடைந்துள்ளன. ஈழத்தமிழர்களின் பிரச்சினையானது மனிதாபிமானம், மனித உரிமைகள், சுயமரியாதை தொடர்புடையது, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அதிகப்படியாக தாமதம் செய்வது, மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். தம், மொழி, கலாச்சாரம் இவற்றின் பெயரால் அடக்கு முறைகள் நடைபெற அனுமதிக்க கூடாது.
இத் தீர்மானங்களில் சிலவற்றைக் நீக்கிப் பார்த்தால் ஏனையவை கவர்ச்சிகரமானவை. ஈழத்தில் இன அழிப்பு நடைபெற்ற சில நாட்களுக்குள் தமிழ் நாட்டின் எழுச்சியை எதிர்கொள்வதற்காக கருணாநிதியுடன் இணைந்து நாடகமாடினோம் என கோதாபாய ராஜப்கச கூறியதற்கு இன்று வரை கருணாநிதி பதிலளிக்கவிலை. நாடகத்தை அதற்கு முன்னமமே அனைவரும் புரிந்து கொண்டனர். மறுபக்கத்தில் டெசோ மாநாட்டிற்கு எதிராக இலங்கை அரச பேரினவாதிகளின் கண்டனம் கூட ஒரு நாடகமே என்பதையும் புரிந்துகொள்ள நாளாகவில்லை.
டெசோ போன்ற இலங்கைக்கு வெளியிலிருந்து வரும் காத்திரமற்ற செத்துப்போன எதிர்ப்புக்களுக்கு இலங்கை அரசு முக்கியத்துவம் வழங்குவதனூடாகவே சிங்கள மக்களை ஆக்கிரமிப்பு மற்றும் புலிப் பூச்சாண்டி காட்டி தமக்கு ஆதரவாக தொடர்ந்தும் பேணிக்கொள்ளலாம் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
இனப்படுகொலை தொடர்வதை விரும்பிய வை.கோபாலசாமி, திருமாவளவன், நெடுமாறன், சீமான் போன்ற இனவாதிகள் கருணாநிதிக்கு எந்தவகையிலும் குறைவற்றவர்கள். கருணாநிதியை எதிர்ப்பதற்கு இவர்கள் எந்த வகையிலும் தகுதியற்றவர்கள்.