இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் மிகவும் குழப்பமான அரசியல் நிலவரம் அங்கு நீடித்து வருகிறது.சிறுபான்மை இனங்கள் மிகப்பெரும் அச்சுறுத்தலுக்குள் வாழ்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் இனக்கொலை குற்றவாளியான ராஜபட்சேவுக்கு இந்தியா சிகப்புக் கம்பள வரவேற்பும் விருந்தும் அளித்தது. அதையொட்டி தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய மத்திய அரசு தமிழர் தரப்புடனும் பேசுவோம் என்றது. இந்நிலையில் இந்தியாவே ஒரு அரசியல் தீர்வை தயாரித்து வைத்திருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. ( இப்படி பல அரசியல் தீர்வுகளை இந்தியா ஈழத் தமிழர்கள் மீது ஏற்கனவே திணித்துள்ளது. சண்டித்தனம் செய்யும் பெரியண்ணன் மனப்போகிலேயே இவைகள் அமைந்தது சோகமாக ரத்த வரலாறு) இதைத்தொடர்ந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது.இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்திருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களூக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.அந்த அழைப்பை ஏற்று அவர்கள் இன்று மாலை இந்தியா வந்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஷ், பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை, விநாயகமூர்த்தி, சுமந்திரன் ஆகிய 6 எம்.பிக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.இவர்கள் 5,6,7 ஆகிய தேதிகளில் டில்லியில் தங்கியிருப்பார்கள். ‘’ தமிழர்களின் மறுவாழ்வு, இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஆகியவை குறித்தும் பேசுவோம் ’’என்று கூறியுள்ளார்கள்.