இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க டில்லி வரும் அந்நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
டில்லியில் ‘பீமஸ்டெக்’ எனப்படும் 7 தெற்காசிய பிராந்திய நாட்டுத்தலைவர்களின் மாநாடு எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டில்லிக்கு வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை, மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் வீதித்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்று முன்தினம் தனித்தனியே சந்தித்துப்பேசினார்.
டில்லி வரும் இலங்கை ஜனாதிபதியிடம் ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் வற்புறுத்த வேண்டும் என்று டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்தார். அத்துடன், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக அனுப்பிவைக்கப்படும் மருந்துகள் மற்றும் நிதி உதவிகளை, இலங்கை அரசு மூலம் விநியோகிக்காமல் இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் மேற்பார்வையில் வழங்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் எனவும் கூறப்படுகின்றது.