அசாதாரண பூகோள நிகழ்வாகிய சுனாமி பற்றிய பீதி பல காலமாக மனிதரிடையே இருந்து வருகின்றபோதிலும் இந்த நூற்றாண்டில் வாழும் அனைவரையும் பீடிக்கும் அளவிற்கு 2004 ம் ஆண்டு பேரழிவு வரலாற்றில் இடம்பிடித்து விட்டது.
கடந்த 40 வருடங்களில் நடந்திருக்க கூடிய மிகப்பெரும் இயற்கை பேரழிவாக பேசப்படும் டிசம்பர் 26 ம் திகதிய சுனாமி 150, 000 மேலான மனித உயிர்களை பலிகொண்டும், பல பில்லியன் டொலரிலும் மேலான பொருளாதார நஷ்டத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. 1960 ம் வருடத்தின் பின்பு நிகழ்ந்த மிகப்பெரிய சுனாமி என வரலாற்றில் மட்டுமல்ல பூகோள ரீதியிலும் புதிய பதிவுகளையும் வடுக்களையும் பதித்துவிட்ட இயற்கைப் பேரழிவுடன் தொடர்புள்ள தகவல்கள் வருமாறு உள்ளது.
தமிழ் மக்களின் பண்டய இலக்கியங்களில் ஆழிப்பேரலை அல்லது கடல்கோள் என்பது சுனாமியை அர்த்தப்படுவதாக அறியப்படுகின்றது. அத்துடன் இது மூலமாக பழங்கால தமிழர்களினாலும் இத்தகைய பேரழிவுகள் எதிகொண்டதினை அறியமுடிகின்றது.
சுனாமி தொடர்பிலான தகவல்களும் நிகழ்வுகளும் கடந்த 4000 வருடம் காலமாக மிகவும் அறியப்பட்டும் பேசப்பட்டும் வந்தபோதிலும் சர்வதேசரீதியில்1963ம் வருடம் நடந்த அனைத்துலக விஞ்ஞான மாநாட்டில் அகிலத்திற்கும் பொதுவான “சுனாமி’ (Tsunami) எனும் சொல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இயற்கை பேரழிவு பற்றிய பதிவுகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து (4000 வருடங்கள்) இன்றுவரை பதிவாகிய மிகப்பெரிய சுனாமிகள் முறையே 1883 (36,000 பேர் பலி) , 1998 ஜுலை (36,000 பேர் பலி) , 2004 ம் டிசம்பர் (150,000 பேர் பலி) என்பன அதிக மனித உயிகளை காவுகொண்ட பேரழிவுகளாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இந்த நூற்றாண்டில் 2004 ம் டிசம்பர் 26 ம் திகதிய கடுமையான சுனாமியில் 11 நாடுகளைச் சேர்ந்த 150,000 மக்களின் உயிகளை உடனடியாகவும் மேலும் பல நூறு உயிகளை அடுத்த சில நாட்களிலும் பறித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் குறிப்பாக இந்தோனேசிய நாட்டின் தீவுகளில் ஒன்றாகிய சுமத்திரா எனும் பகுதியில் கடலுக்கடியில் நிகழ்ந்த மிகப்பெரிய பூமியதிர்வு காரணமாக உருவாகிய ஆழிப்பேரலை (சுனாமி) பலிகொண்ட பன்நாட்டு மக்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு:
இந்தோனேசியா 80,246
இலங்கை (ஸ்ரீலங்கா) 28,627
இந்தியா 8, 955
தாய்லாந்து 4,812
சோமாலி 142
மலேசியா 66
பர்மா 53
தான்சனியா 10
பங்களாதேஷ் 2
சீசெல் 1
கென்யா 1
2004 ம் டிசம்பர் 26 ம் திகதிய கடுமையான சுனாமியால் பதிக்கப்பட்ட பெளதீக தரவுகள்.பூகோளரீதியில் வர்ணிக்கப்படும் முக்கிய 11 தட்டுக்கள் இரண்டில் பலநூறு வருடமாக நெருக்குதல் காரணமாக உருவாகி இருக்கக்கூடிய ஒட்டுமொத்த விசையின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் இந்த நிகழ்வு என சொல்லப்படுகின்றது.
இந்து சமுத்திரத்தின் கடலுக்கடியிலான பூமியதிர்வு இந்தோனேசிய நாட்டின் உள்ளூர் நேரம் காலை 7.58 க்கு நிகழ்ந்தது. பூமியதிர்வு அளவிடும் அலகில் 9.0 எனும் குறியீட்டினால் அழைக்கப் படுகின்றது. இராட்சத வெடிப்பு காரணமாக உருவாகிய அலையின் அதிகபட்ச வேகம் மணிக்கு 1000 கிலோமீற்றராக பதிவாகியுள்ளது. சுமத்திரா சுனாமி 7000 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சீசெல் நாட்டினையும் தாக்கியிருந்தது.
மேலும் இந்த பேரழிவின் தாக்கம் இப்படி இருக்கும் என கற்பனையில் கூட பலர் நினைத்திருக்கவில்லை. இருந்த போதிலும் நடந்து முடிந்துவிட்ட சுனாமி அன்று தமிழ்நாட்டில் பலர் உயிரை ஒருவரால் காப்பாற்ற முடிந்ததாகவும் செய்தி மூலம் அறிந்தோம். மேற்படி நபர் சுனாமி பேரழிவு பற்றிய விபரணச் சித்திரத்தினை (Discovery Channel) சிலகாலம் முன்பு பார்வையிட்டதாகவும், அதில் சுனாமி காலத்தில் எவ்வாறு உயரமான குன்று அல்லது மலைகளில் ஏறி தப்ப முடியும் என சொல்லப்பட்ட விடயத்தினை கிரகித்த காரணத்தினால் அன்று அவரும் அந்த முறைகளில் பலரை உதவி செய்து காப்பாற்றி உள்ளாராம்.
ஆகவே எவ்வளவு விடயங்கள், தகவல்கள், செய்திகள் எங்கெல்லாம் உதவும் என்பதற்கு நல்ல உதாரணமாக மேற்படி சம்பவம் உள்ளது எனலாம்.
நன்றி,
-நெல்லியடி-