தமிழர்களின் இறையாண்மை காப்பாற்றப்படவேண்டும்: இடதுசாரிகள்- மற்றும் சோசலிஸ்டுகள் வலியுறுத்தல் !
சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய உறுப்பினரும் மூத்த ஊடகவியலாளருமான திரு.கோபி அவர்கள் பேசும்போது, 2009ம் ஆண்டுக்கு முன்னர் முழு உலக நாடுகளும் இலங்கைக்கு உதவியதாகத் தெரிவித்தார். அமெரிக்கா, பிரித்தானியா , ஈரான், பாக்கிஸ்தான், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவியதாகவும், அவை தமக்குள் இருக்கும் பேதங்களைக் கூட களைந்துவிட்டு இலங்கைக்கு உதவியது பெரும் வியப்புக்குரிய விடையம் என்று அவர் மேலும் தெரிவித்தார். குறிப்பாக இப்படி ஒரு கூட்டை வேறு எந்த இடத்திலும் பார்த்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிராண போக்கைக் கடைப்பிடிப்பது வியக்கத்தக்கது என்று தெரிவித்த அவர் மேற்குலகம் தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்று நம்புவது ஒரு மாயை எனக் கூறினார்.
பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் வாகீசன் பேசும்போது, பிரித்தானியர்கள் எவ்வாறு இலங்கையை ஆண்டனர் என்பதனையும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கு எவ்வாறு ஒரு கட்டாயக் கல்யாணத்தைச் அவர்கள் செய்துவைத்தனர் என்றும் விவரித்தார். இதனூடாக தமிழர்கள் எவ்வாறு சிங்கள ஆட்சியாளர்கள் கைகளில் விடப்பட்டனர் என்பதனையும் அவர் மேலும் விபரித்தார். இடதுசாரியன் திரு.ரொன் ரிடினர் பேசும்போது குறிப்பாக கியூபா மற்றும் அல்பா நாடுகளைப் பற்றி விபரித்தார். கியூபா போன்ற நாடுகள் அடக்கி ஒடுக்கப்படும் இனத்துக்காக தாம் குரல்கொடுப்பதாக பல ஆண்டுகள் கூறிவந்ததையும், அடிப்படையில் அந் நாடு ஒரு அமெரிக்க எதிர்ப்பு நாடாக இருந்தும் அது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்காமல், அமெரிக்காவின் போக்கோடு இணைந்து இலங்கைக்கு எவ்வாறு உதவியது என்பதனையும் அவர் கூறியிருந்தார்.
அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசுகளை நம்பி போராட்டங்களை முன்னெடுக்கவேண்டாம் என அவர் தமிழர்களுக்கு எடுத்துரைத்தார். இதனை விட, டப்பிளினில் நடைபெற்ற நீதிவிசாரணை, மற்றும் சர்வதேச சுயாதீன விசாரணைகளை நாம் ஊக்குவிப்பதன் மூலமே தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை கிடைக்கும் என்று அவர் மேலும் கருத்துத் தெரிவித்தார். மாறிவரும் அமெரிக்காவின் நிலைப்பாட்டைப் பற்றியும் அவர் பல தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டார். இக் கலந்துரையாடலில் பல வேற்றின அமைப்புகளும், ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். குறிப்பாக பலஸ்தீன அமைப்பு, சூடான் அமைப்பு, மற்றும் சிரியாவில் இருந்தும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
தமிழர்கள் வெறுமனவே தாமாக தனித்து நின்று போராடாமல், உலகில் சுயநிர்ணய உரிமைகளுக்காகப் போராடும் மற்றைய அமைப்புகளோடு தம்மையும் இணைத்துக்கொண்டு போராடவேண்டும் என அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்து மிகவும் வரவேற்க்கத்தக்க விடையம் ஆகும். பிரித்தானியாவில் உள்ள தொழிற்கட்சியில் சும்மார் 7 மில்லியல் உறுப்பினர் இருப்பது இந்தவேளையில் சுட்டிக்காட்டப்பட்டது. இத் தொழிற்கட்சியின் அனுசரணையைப் பெறுவதன் மூலம், அவர்களூடாக நாம் ஒரு பலம் பொருந்திய அமைப்பாக இருக்கமுடியும் எனவும் இங்கே சுட்டிக்காட்டப்பட்டது. இக் கருத்துக்கள் தமிழர்களிடையே நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.
இக் கருத்தரங்கில், ஆய்வாளரும் மூத்த ஊடகவியலளாருமான திரு.இதயச்சந்திரன், முந் நாள் பி.பி.சி தமிழ் அறிவிப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம். BTF தலைவர் ரூட் ரவி, பி.பி.சி சிங்களசேவையில் இருந்து பண்டார, தமிழ் நெட் ஊடகவியலாளர் எனப் பலர் கலந்துகொண்டனர்.
-தமிழர் தகவல்.