அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சென்றதற்காக பிரதியமைச்சர் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். அவ்வாறெனில் யாழ்ப்பாணம் ஒரு தனிநாடாவென ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட ஒழுங்குப் பிரச்சினையொன்றின்போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது;ஒரு அமைச்சர் வெளிநாடுசெல்லும்போதுதான் அவரின் அமைச்சுப் பொறுப்புக்குப் பிரதியமைச்சர் நியமிக்கப்படுவதும் அவர் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்பதும் வழமை. ஆனால், பாரம்பரியக் கைத்தொழில்கள்,சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சென்றதற்காக அவரின் அமைச்சுப் பொறுப்பைப் பிரதியமைச்சர் சத்தியப் பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்டுள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அமெரிக்கா செல்லவுள்ளதாலே இப்பதவிப் பிரமாணம் எனக் கூறப்பட்டது. ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமெரிக்கா செல்லவில்லை. யாழ்ப்பாணம் தான் சென்றார். அவ்வாறானால் யாழ்ப்பாணம் ஒரு தனிநாடா? அரசாங்கம் யாழ்ப்பாணத்தைத் தனிநாடாக ஏற்றுக்கொண்டுவிட்டதா? என்பது தொடர்பில் சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும்.
இதே வேளை டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமரிக்க விசா நிராகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்ச குழுவிற்கு விசா நிராகரிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியது. ஐக்கியநாடுகள் ஒன்று கூடலுக்கு அந்த நாடு விசாவை நிராகரித்தால், ஐக்கியநாடுகள் காரியாலயம் அதனை வழங்கவேண்டும் என்பது சட்டவிதி. இச் சட்டத்தினை அமரிக்காவிற்குச் சுட்டிக்காட்டி இந்திய அதிகாரிகள் ராஜபக்சவின் குழுவிற்கான விசாவை தடையின்றிப் பெற்றுக்கொள்ள உதவியதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இன்று ஒரு அமைச்சுக்கு இரு அமைச்சர்கள் உள்ளனர். இதில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரா அல்லது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பிரதியமைச்சர் அமைச்சரா என்பதையும் கூற வேண்டும் என்றார்.இதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ. இது தொடர்பில் தனக்கு எந்தவித அறிவிப்புகளும் வரவில்லை என்று கூறினார்.