இதைவிட இதன் பின்புலத்தில் தீய அரசியல் நோக்கங்களும் காணப்படுகின்றன.
ஜெயலலிதாவின் 50 நிமிட நேரச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து தமிழ் ஊடகங்களின் ஆய்வுகள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களாக வெளிவந்தன.
இவ்வாறான திரிபுகளின் மத்தியில் இறுதியாக வெளியான தகவல்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா சபையில் இந்திய அரசு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும், கச்சைத் தீவை மீட்க வேண்டும் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மகிந்த ராஜபக்சவை மோடி மிரட்டியதாகக் கூறப்பட்ட பொய்கள் வெளியானதைத் தொடர்ந்து பிபிசி தமிழோசை உடபட ஊடகங்கள் புதிய பொய்யைப் பரப்பின.ஜெயலலிதா அரசின் கோரப்பிடிக்குள் ஈழத் தமிழ் அகதிகள் மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்படும் அதே வேளை ஊடக வியாபாரிகள் ஜெயலலிதாவிற்கு முகப்புபூச்சு தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.
பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா, “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு சுமார் 15 நிமிடங்களுக்கு நடைபெற்றது. இந்தச் சந்திப்பு தமிழகத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விவரிக்கப்பட்ட மனுவை பிரதமரிடம் அளித்துள்ளேன். முக்கியமாக, அதில் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு குழுவிற்கு மத்திய நீர் மேலாண்மை ஆணையம் சார்பாக அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
சமீபத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அணையின் அளவை உயர்த்தப்படுவதை மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக்குழு கண்காணிக்க வேண்டும். அதில் தமிழகம், கேரளா மற்றும் மத்திய அரசு சார்பாக தலா ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பை மேற்கொள்ள தமிழக அரசு சார்பாகவும் கேரள அரசு சார்பாகவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மத்திய அரசால் நியமிக்கப்பட வேண்டிய அதிகாரியை உடனடியாக அவசர காலத்தில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். தென்கிழக்கு பருவமழை தொடங்கும் முன்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், விவசாயிகள் பயனடைவர் என்பதை அவரிடம் விவரித்தேன். பிரதமர், ஒரு வாரத்தில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வித தாமதமுமின்றி உடனடியாக அமைக்க வேண்டுமெனவும் அவரிடம் வலியுறுத்தினேன். அதன்பிறகு, அந்த வாரியத்தால் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னர்தான் காவிரி நதிநீர் தீர்ப்பாணையத்தின் இறுதி உத்தரவை நடைமுறைப்படுத்த முடியும்.
நான் தமிழகத்திற்காக சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வைக்கவில்லை. மாறாக, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. மத்திய நிதி அமைச்சகத்தாலும் அதற்காக நிதி ஒதுக்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஆனால், இதுவரை அந்த அறிவிப்புகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உதாரணமாக, மத்திய அரசின் விற்பனை வரி 4%-ல் இருந்து 3% ஆகவும், பிறகு 3-ல் இருந்து 2% ஆகவும் குறைக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. எனவேதான் நான் அதற்கு ஒப்புதல் அளித்தேன். மத்திய அரசின் விற்பனை வரி மேலும் குறைக்கப்பட்டாலும், மத்திய அரசால் தமிழகத்திற்கு தர வேண்டிய, சுமார் ரூ.7,000 கோடி நிலுவையில் உள்ளது.
மேலும், பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் சுமார் ரூ.4,000 கோடி மத்திய அரசால் மாநிலத்திற்கு தர வேண்டியுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற இதுவரை மாநிலத்தின் நிதியில் இருந்துதான் செலவிடப்பட்டுள்ளது. அதற்கான நிதி இன்னும் தமிழகத்திற்கு அளிக்கப்படவில்லை. இந்தச் செலவு தமிழகத்தின் நிதி நிலையை மோசமான அளவில் பாதித்துள்ளது. எனவே, நான் இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு உடனடியாக இந்த நிதியை தர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
மின் பிரச்சனையைப் பொறுத்தவரையில், கூடங்குளம், நெய்வேலி உள்ளிட்ட மத்திய நிலைகளில் இருந்து தமிழகத்துக்குத் தரப்பட வேண்டிய 15 சதவீத மின்சாரம் இன்னும் ஒதுக்கப்படாமலேயே உள்ளது. இந்த 15 சதவீத மின்சாரத்தை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
தமிழக மீனவர் பிரச்சனை குறித்தும அவரிடம் பேசினேன். மேலும், தமிழக பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான முழுமையான மனுவை பிரதமரிடம் அளித்துள்ளேன். ஒரு மாநிலத்தில் 13 ஆண்டுகளாக முதல்வராக இருந்த அவர், தமிழகத்தின் தேவைகளை பொறுமையாக கேட்டறிந்தார். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்தார்” என்று ஜெயலலிதா கூறினார்.
வெறுமனே தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்களை வைத்த்க்கொண்டு அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுக்களை நம்பக்கோரி அரசியல் நடத்திய தமிழ் அமைப்புக்களுக்கு வேறு புதிய வழிகள் இல்லை. அதனால் தான் பாசிஸ்ட் மோடியையும் தமிழினவிரோதி ஜெயலலிதாவையும் நம்பக்கோருகிறார்கள்.