பல்தேசியக் கம்பனிகள் முதலாளித்துவ நெருக்கடிக் காலத்தில் தமது கொள்ளையைத் தீவிரப்படுத்தியுள்ளன. வறிய நாடுகளான மூன்றாமுலக நாடுகளில் பாசிஸ்டுக்களையும் கொலையாளிகளையும் வைத்து கொள்ளை தீவிரப்படுத்தப்படுகிறது.இந்தியாவில் ஈவிரக்கமற்ற கொள்ளைக்குப் பெயர்போன இருவர் சந்திக்கின்றனர்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி போனில் முதல் – அமைச்சர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்தினார். பதிலுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பிரதமர் மோடியும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச முதல்–அமைச்சர் ஜெயலலிதா டெல்லி செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகிற 3–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்கிறார். டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது சவுத் பிளாக் அலுவலகத்தில் சந்தித்து பேசுவார்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை மனு ஒன்றை கொடுப்பார். அந்த மனுவில், மத்திய அரசில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தமிழ்நாட்டின் சில முக்கிய பிரச்சினைகள் குறித்து கூறப்பட்டிருக்கும்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளில் உடனடியாக முன் உரிமை கொடுத்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் பற்றியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதோடு தமிழ்நாட்டின் நியாயமான உரிமைக்கும், விரைவான வளர்ச்சிப் பாதைக்கும் உறுதுணையாக இருக்க வலியுறுத்தியும் அந்த மனுவில் கூறப்பட்டு இருக்கும்.