ஒடுக்கப்பட்ட சமூகமே தமிழ்தேசத்தில் தமிழர்களின் உரிமைகளை முன்னெடுத்து செல்லக்கூடிய சமூகமாய் நிற்கிறது. இச்சமூகத்தின் அரசியல் கட்டமைப்புகளில் உடைவுகள், பிளவுகள், திரிபுகள் ஏற்படுவது என்பது தமிழ்ச்சமூகத்தின் அரசியல் போராட்டங்களை பின்னுக்குத்தள்ளும் என்பது நிதர்சனம். இக்கட்டான இந்தச் சூழலில் தமிழினம் ஒடுக்கப்பட்டச்சமூகத்தின் பின் நிற்கிறது என்பதை நாம் மத்திய-மாநில அரசுக்கு உணர்த்தவேண்டும்.
இந்த துப்பாக்கிசூடு சனநாயக தன்மையற்று, உரிமை மறுக்கப்பட்டு, திரும்ப திரும்ப தமிழ்நாட்டின் அரசுவர்க்கம் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிரான கட்டமைப்பை தன்னகத்தில் கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது பத்தாண்டுகளுக்கு ஒருமுறையோ ஒடுக்கப்பட்டச் சமூகத்தின் ஒற்றுமையை மக்கள் திரட்சியின் மூலமாக நிரூபணமாக்கப்படும் பொழுது கொடூர ஒடுக்குமுறை கொண்டு அரசால் அது சிதைக்கப்படுகிறது. இந்த ஏழு பேரின் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் மூலம் இது நிரூபிக்கப்படுகிறது.
மேலும் இக்குறிப்பிட்டச் சம்பவம் அரசு வன்முறை மட்டுமல்லாது இப்படுகொலைகள் மூலம் இந்திய அரசும், அதிகாராவர்க்கமும் தமிழர்களிடையே உருவாகிவந்த ஒருவித அரசியல் ஒற்றுமையை சிதைக்கும் முயற்சி என்பதை நாம் கவனித்தில் கொள்ள வேண்டும். ஆனால் அதே சமயம் இது தமிழக அரசின் நிலைப்பாடு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிரானது என்பதும் நிரூபனமாகிறது. இந்த கட்டமைப்பை எதிர்கொண்டு வெல்வதின் மூலமே ஆரோக்கியமான தமிழ்த்தேசிய அரசியல் களத்தை வென்றெடுக்க முடியும். தமிழர்களாலேயே ஒடுக்கப்படுகின்ற ஒரு தமிழ்ச்சமூகத்தின் மக்களை விடுவிக்காமல், அவர்களின் உரிமையை, சுதந்திரத்தை உறுதிசெய்யாமல், நம் சமூகம் உய்யமுடியும் என்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
இந்த ஒடுக்குமுறையை முறியடிக்கும் செயல்திட்டங்களை உருவாக்க நாம் ஒன்றினையவேண்டும். இதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனூடாகவே தான் தமிழ்த் தேசிய விழுமியங்கள் வென்றெடுக்கப்பட முடியும்.
நீண்டகால அடக்குமுறை மட்டுமல்லாமல் வெகுசமீப காலத்தில் நடைபெற்ற தாமிரபரணி படுகொலை முதல் உத்தபுரம் கொலைவரை நாம் ஒன்றிணைந்து நின்று அரசவன்முறையை முறியடித்திருக்க வேண்டும். வரும் காலத்தில் தமிழ்தேசியத்தின் விடுதலையை ஒடுக்கப்பட்டச் சமூகத்தின் நேர்மையான அரசியல் தலைமையே வழி நடத்த முடியும். இதுவே தமிழர்களுக்கு சாத்தியமான அரசியல் வருங்காலம்.
இந்த அநியாயங்களை எதிர்த்து, சக இயக்கங்களோடு இணைந்து பணியாற்ற மே பதினேழு இயக்கம் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது. இதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் இயக்கங்களோடும் இணைந்து செயலாற்ற மே பதினேழு இயக்கம் விருப்பம் தெரிவிக்கிறது. இதரத் தோழர்களையும் இதற்கான முயற்சிகளுக்கு அழைக்கிறது.
If you don’t stand for something you will fall for anything.
Malcolm X
நாம் வெல்வோம்.
மே பதினேழு இயக்கம்.