தமது வாழ்க்கைக் காலத்தின் இளைமைப் பகுதி முழுவதையும் எப்போதும் கொல்லப்படலாம் என்ற மரணபயத்திலேயே தொலைத்தவர்களின் விடுதலை மனிதகுலத்தை மகிழ்ச்சிப்படுத்தியது. மரணத்துள் வாழ்ந்தவர்கள் மக்களைக் காணப்போகிறார்கள் என்ற செய்தி உலகை அழகுபடுத்தியது.
இதற்கு அப்பால் ஜெயலலிதாவி தேர்தல்காலக் கணக்குப் பொய்த்துப்போகவில்லை என்பதும் புலனாகிறது.
இங்கு இந்திய அதிகாரவர்க்கமும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் அப்பாவிகளைச் சிறையிலடைத்து வைத்திருப்பதற்கு இதுவரை துணைபோயிருக்கிறார்கள் என்பதை அவர்களே இப்போது சொல்லியிருக்கிறார்கள். சமூக உணர்வோடு ஈழத்தமிழர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் குரல்கொடுக்கும் அனைவரும் கடந்த 15 ஆண்டுகள் கூறிவந்ததை இன்றுதான் ஜெயலலிதா புரிந்துகொண்டிருக்கிறார், அதாவது 15 ஆண்டுகள் அப்பாவிகளின் வாழ்க்கையைப் சிதைப்பதற்குத் துணைபோயிருக்கிறார். இதற்கு நன்றி சொல்வதா, அன்றி அப்பாவிகளின் இளமைக்காலத்தை அழித்துச் சிதைத்ததற்காக அவரைத் தண்டிப்பதா? இந்தச் சிறிய சமன்பாட்டைக்கூட புரிந்துகொள்ள முடியாதாவர்கள் மக்களைத் தெரியாத அதிகாரவர்க்கங்களின் அடியாட்களாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.
வரலாறு முழுவதிலும் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளின் உச்சமாகத் திகழ்வது வன்னி மண்ணில் நடைபெற்ற இனப்படுகொலை. இதனை நடத்திய சிங்கள பௌத்த பேரினவாததை இக்காலப்பகுதியில் வழி நடத்தியவர் மகிந்த ராஜபக்ச. இன்றும் இனச்சுத்திகரிப்பை திட்டமிட்டு நடத்தும் ராஜபக்ச என்ற இனகொலையாளி தமிழ் மக்களதும் மனித குலத்தினதும் விரோதி.
இன்னும் சில நாட்களில் ராஜபக்ச சிறையிலுள்ள சில தமிழர்களை விடுவித்துவிட்டால் அவருக்கு நன்றி தெரிவிக்கலாம் என்றால் இன்று ஜெயலலிதாவிற்கும் நன்றி தெரிவிக்கலாம்.
ராஜபக்ச அப்பாவிகளைச் சிறையிலடைத்து அவர்களின் வாழ்கையை அழித்ததற்காகதண்டிக்கவேண்டும் என்று கருதினால் ஜெயலலிதாவை நோக்கியும் அதே கோரிக்கை வைக்கப்பட வேண்டும்.
தமிழ் நாட்டிலுள்ள இருபெரும் கட்சிகளின் அரசியல்வாதிகளில் ஜெயலலிதா ஈழப் போராளிகளை ஒடுக்கிய அளவிற்கு யாரும் ஒடுக்கியதில்லை. தடாச் சட்டமும் கியூ பிரிவும் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளைகள். ஈழப் போராட்டம் அழிக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகப் பிரச்சாரம் மேற்கொண்டவர் ஜெயலலிதா. ஈழப் போராளிகள் பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்தவர்.
ராஜபக்ச தமிழ்ப் பேசும் மக்களுக்கு தன்னுரிமையை அங்கீகரித்து பிரிந்து செல்லும் உரிமையைத்
தமிழ்த் தேசிய இனங்களுக்கு வழங்கினால் அவரைப் போர்க்குற்றங்களிலும் இனப்படுகொலைக் குற்றங்களிலும் இருந்து விடுவிக்க மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் முகாம்களில் மந்தைகள் போல அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளை ஜெயலலிதா விடுவித்தால், இரண்டாவது சந்ததியைக் காணும் தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்கு பிரசா உரிமை வழங்கினால் ஜெயலலிதாவிற்குப் பாராட்டுத் தெரிவிக்கலாம்.
தேர்தல் காலத்தில் ராஜபக்ச சில நூறு கைதிகளையும், ஜெயலலிதா ஏழு போராளிகளையும் விடுவித்த ஒரே காரணத்திற்காக இந்த இருவரையும் ஈழத் தந்தை என்றும் ஈழத் தாய் என்பதையும் கூறுவது அதிகாரவர்க்க ஒட்டுண்ணித்தனம்.