29.09.2008.
இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரம் என்ற தொனிப்பட இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியிருந்த கருத்துத் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்பதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நாடு சிங்களவருக்கு சொந்தமானது என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால், இங்கு சிறுபான்மையின சமூகங்களும் உள்ளன. எமது மக்களைப் போன்றே அவர்களும் நடத்தப்படுகின்றனர். நாட்டின் பெரும்பான்மையினம் 75 வீதமாகவுள்ளது. எனவே, நாட்டைப் பாதுகாக்கும் உரிமை எமக்குண்டு சிறுபான்மையினர் எம்முடன் வாழலாம். ஆனால் தேவையற்ற விடயங்களுக்கு அவர்கள் முயற்சிக்கக் கூடாது” என கனடாவின் நஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இராணுவத் தளபதி கூறியிருந்தார்.
இவ்வாறு இராணுவத் தளபதி கூறியிருப்பதான இரண்டு தெளிவான நிலைப்பாட்டை வெளிக்காட்டியிருப்பதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. உயர்பதவியிலிருக்கும் இராணுவத் தளபதி தனது சொந்தக் கருத்தைத் தெரிவிக்கும் உரிமைகொண்டவராக இருந்தாலும், இவ்வாறான கருத்துக்களைத் தொடர்ந்தும் தெரிவிக்க அரசியல் நிறைவேற்று அதிகாரம் இடமளித்துள்ளது என்பது தெளிவாகப் புலனாவதாகவும், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இராணுவத் தளபதி என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் என்பது தெளிவாகியிருப்பதாகவும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
இராணுவ அதிகாரியொருவர் மக்களால் தெரிவுசெய்யப்படும் அரசியல்வாதியொருவரைப் போன்று இவ்வாறு கருத்துவெளியிட்டிருப்பதாகவும், இந்த விடயம் தொடர்பாக பதில்சொல்லவேண்டிய கடப்பாடு பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கெ இருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகிறது. இராணுவத்தின் உயரதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் தலைவர்களைப் போன்று தமது சொந்தக் கருத்துக்களை அரசாங்கத்தின் கருத்துக்களைப்போலத் தெரிவிப்பது நிறுத்தப்படவேண்டும் எனவும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அறிவித்துள்ளது.
பொதுவான மேடைகளில் இராணுவ உயரதிகாரிகள் இனப்பிரச்சினை தொடர்பான சொந்தக்கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதிக்கக் கூடாதெனவும், இவ்வாறான விடயங்களைக் கட்டுப்படுத்தாமல் அரசாங்கம் ஊக்கப்படுத்தினால் இராணுவத்தினரால் ஆழப்படும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் போன்று இலங்கையும் எதிர்நோக்கவேண்டிவருமென மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.