ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து என்றும், அனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியில் தெரிவித்தார்.
சென்னையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்துவிட்டு இலங்கை திரும்பிக்கொண்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், ஐ.நா. மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதாக முடிவெடுக்கப்பட்ட விதம் மிகவும் ஆரோக்கியமற்ற ஒன்று என்றும், இந்த பிரச்சினை தொடர்பாக தாம் கொழும்பு சென்றதும் மற்றவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
சனிக்கிழமை தமிழோசையிடம் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜெனிவா கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்று முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.அதேசமயம், இதற்கான காரணங்களை ஊடகங்களுடன் முழுமையாக விவாதிக்க தாம் விருமபவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.