Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜூலை 10 பொது வேலைநிறுத்தம் : வெகுஜனப் போராட்டத்துக்கான அடித்தளமாகட்டும்!

வ.திருநாவுக்கரசு நாளை நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டமானது மிக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்போராட்டம் ஜே.வி.பி.யின் தலைமையில் முடுக்கிவிடப்படுகின்றது என்பதற்காக அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமில்லையென புறந்தள்ளி விட முடியாது. மேலும், 1980 ஜூலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஜே.வி.பி. பங்குபற்ற மறுத்து நின்றது என்பதற்காகவே றோகன விஜேவீரவின் மைத்துனரும் முற்போக்காளராய்த் திகழ்ந்தவருமாகிய மறைந்த எச்.என். பெர்னாண்டோ தலைமை தாங்கியிருந்த இலங்கை ஆசிரியர் சங்கம் அப்போராட்டத்தில் பங்குபற்ற உத்தேசித்திருந்ததை ஜே.வி.பி.யினர் அன்று இறுதி நேரத்தில் தடுத்துநிறுத்தியதற்காகவோ தொழிலாளி வர்க்கம் நாளை ஆரபம்மாகவிருக்கும் போராட்ட அலையில் இணைந்து கொள்ளாமல் இருந்துவிட முடியாது. குறிப்பாக மாதம் ரூ.300 சம்பள உயர்வு கோரியே 1980 ஜூலை வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அன்றைய போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பல இடதுசாரி தொழிற்சங்கங்கள் இன்று மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் நிலையில் நாளைய (ஜூலை 10) வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்த்து நிற்கின்றன. ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்க சார்பு தொழிற்சங்கத் தலைவர்கள் மத்தியில் ரூ.1000 சம்பள உயர்வு வழங்க இணக்கம் தெரிவித்ததை ஏற்றுள்ளதோடு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் வேலைநிறுத்தப் போராட்டம் செய்வதற்கான சந்தர்ப்பம் இது அல்ல என அத்தலைவர்கள் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கி வருவது ஆச்சரியத்திற்குரியதல்ல.
வாழ்க்கைச் செலவு விசம்போல் ஏறிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் பரந்துபட்ட ஏழை எளிய மக்களும் திணறிக் கொண்டிருப்பதையிட்டோ அவர்கள் பட்டினியாலும் மந்தபோசணை காரணமாகவும் பெரிதும் இருள்மூலமான எதிர்காலத்திற்குள் தள்ளப்பட்டு மனிதத்தூசுகள் ஆக்கப்படும் அபாயத்தினை எதிர்நோக்குகின்றனர் என்பதையிட்டோ மேற்படி தொழிற்சங்கத் தலைவர்கள் கிஞ்சித்தும் கவலையடையாமல் துரோகத்தனமாக வாதம் புரிந்து வருவது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.
இத்தகைய சுயநலமிகளும் சந்தர்ப்பவாதிகளும் தான் தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் “”டட்லி கே படே மசால வடே’ என்று கோசமிட்டவர்கள். இந்த வகையில் சந்தர்ப்பவாத இடதுசாரி அரசியல்/ தொழிற்சங்க தலைவர்கள் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு துணைபோய்க் கொண்டிருப்பவர்களென இனங்காணப்படவேண்டியவர்கள் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய விடயமாகும்.
ஜே.வி.பி.யின் குட்டி முதலாளித்துவ குணாம்சம்
மறுபுறத்தில் ஜே.வி.பி.யைப் பொறுத்தவரை அதன் குட்டி முதலாளித்துவ குணாம்சத்தினையிட்டு விபரிக்கத் தேவையில்லை. அதன் இனவாதமானது பச்சை இனவாதிகள் பதினொரு பேரின் வெளியேற்றத்தோடு அகன்று விடவில்லை. விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை யுத்தம் தொடர வேண்டும். தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு அதிகாரப்பகிர்வு அல்லது சமஷ்டி முறைமை கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைக் கொண்ட அக்கட்சியின் ஒட்டுமொத்தமான நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் தெரியவில்லை. சுருங்கக் கூறின், அது ஒரு உண்மையான இடதுசாரி, தொழிலாளி வர்க்க கட்சி அல்ல என்பது பகிரங்க இரகசியமாகும். அவர்கள் முன்வைத்துள்ள ரூ5000 சம்பள உயர்வுக் கோரிக்கை இன்றைய விலைவாசி உயர்வுகளுக்கு ஓரளவேனும். ஈடுகொடுக்கக்கூடியதாயிருக்கும் எனலாம். ஆனால், சில நிபந்தனைகளின் அடிப்படையில் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு ஜே.வி.பி. தயாராயிருப்பதாக அறிவித்தமை நிச்சயமாக ஏற்புடையதல்ல.
அதாவது மந்திரி சபை ஏறத்தாழ கால்வாசியாகக் குறைக்கப்படவேண்டும். ஆகஸ்ட் 23 இல் நடைபெறவுள்ள சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தம் உடனடியாக அமுல்படுத்தப்படவேண்டும். ஜனாதிபதி ஆலோசகர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும் ஆகியவையே ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளாகும். எனவே, தொழிலாளிகளின் நன்மை கருதியன்றி தனது அரசியல் நலன் கருதியே ஜே.வி.பி. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிகின்றது.
ரூ.5000 சம்பள உயர்வு கோரிக்கை காலத்தின் தேவை
எவ்வாறாயினும், ரூ.5000 சம்பள உயர்வுக்கான கோரிக்கையானது காலத்தின் தேவை என்ற வகையில் அதனையே இலக்காகக் கொண்டு ஜூலை 10 போராட்டத்திற்கு பரந்தளவு ஆதரவு கிட்டும் நிலை காணப்படுகின்றது. 1980 ஜூலை வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியிருந்த 1 இலட்சத்துக்கு மேலான தொழிலாளர்களை முற்றிலும் மனித நேயமின்றி உடனடியாக வேலை நீக்கித் தூக்கி வீசியதோடு, “”தொழிலாளி நண்டுகள் நரிக்குன்றுகளுக்குள் தள்ளப்பட்டுவிட்டார்களென’ எண்ணி நகையாடிய ஐ.தே.க.வும் தனது அரசியல் நலனுக்காக இந்த வேலை நிறுத்தத்தை ஆதரித்து நிற்கிறது. ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அடங்கலாக பல அமைப்புகள் நாளைய போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் இப்போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கூNஅ) முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் “”இன, மத பேதமில்லாமல் கட்சி வேறுபாடுகள் இல்லாமல் சகல தொழிற்சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு இதனை வெற்றியடைச் செய்ய வேண்டும்’ என அழைப்பு விடுத்துள்ளது. இது வரவேற்கத்தக்க நகர்வாகும். 1980 ஜூலை வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது முன்னணியில் நின்றவனென்ற வகையில் அப்போராட்டத்தில் மொழிவழித் தொழிற்சங்கமாகிய அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தையும் (அஉகு) பங்குபற்றச் செய்வதில் ஈடுபட்டிருந்தமை எனக்கு ஞாபகம் . தமிழ் அரசியல் தொழிற்சங்க அமைப்புகள் இத்தகைய பொதுப்போராட்டங்களில் இணைந்து கொள்வது மிக அவசியமாகும். தென்னிலங்கையிலும் அவ்வப்போது அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படும் தொழிலாளிகள் , விவசாயிகள் , மாணவர்கள் போன்ற மக்கட் பிரிவினருடன் தமிழர் தலைமைகள் கைகோர்த்து உழைப்பது தான் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு கொடுக்க வேண்டிய பதிலடியாகும். ஏன், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது கூட பரஸ்பரம் உதவிக்கரம் நீட்டுதல் நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்ப வல்லது என்பதையும் குறிப்பிடலாம். இவற்றுக்கெல்லாம் தடைக்கல்லாக பதவி வெறிப் பிடித்த சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் வகிக்கும் பாகத்தையும் மறந்து விட முடியாது. உதாரணமாக தொழில் விருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எவ்வாறு செயற்பட்டு வந்துள்ளார் என்பதைப் பார்க்கலாம். சட்டத்துறை பேராசிரியராக கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தராகப் பதவி வகித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் அழைப்பின் பேரில் அரசியலில் பிரவேசித்து அரசியலமைப்பு விவகாரம் மற்றும் நிதி அமைப்பு பொறுப்புகளை வகித்தவர். பின்னர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. அர சாங்கத்தில் இணைந்து அரசியலமைப்பு விவகார அமைச்சர் பதவி வகித்ததோடு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்திய ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்கத்தின் பிரதான பேச்சாளராகப் பங்கேற்றிருந்தவர். தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமையிலான தீர்வு உகந்தது என ஏற்றிருந்தவர். ஐ.தே.க. 2004 இல் பதவியிழந்தபின் 2006 அக்டோபரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துகொண்டதாயினும் அமைச்சுப் பொறுப்புகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான இணக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனால், அமைச்சுப் பொறுப்பு ஏற்க வேண்டுமென அதிகம் , அவா கொண்டு பெரிதும் அழுத்தம் கொடுத்தவர்கள் வரிசையில் பீரிஸ் முதன்மையாளராக விளங்கியவர். பின்னர் ராஜபக்ஷ அரசாங்கத்தில் பிடித்தமான அமைச்சையும் பெற்றுக் கொண்டார். சென்ற வாரம் இடம்பெற்ற 2008 க்கான இலங்கை பொருளாதார உச்சி மாநாடு எனும் விவாத மேடையில் பீரிஸ் கூறியவனவற்றைப் பார்ப்போம். அதாவது “”இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு 2 வகையான அணுகுமுறை தேவை. களத்தில் போதுமானளவு இராணுவ பலமின்றி நீதியானதும் நிலைபெறக் கூடியதுமான அரசியல் தீர்வு காண முடியாது என்பதையே கடந்த கால அனுபவம் காட்டுகின்றது. ஏற்கனவே இருப்பதை (13 ஆவது திருத்தத்தை) முன்னெடுக்க வேண்டுமே ஒழிய அதிகாரப் பகிர்வு தொடர்பாக எட்ட முடியாத கோட்பாடுகள் மீது காலத்தை வீணடிக்கக் கூடாது. கையில் உள்ள ஒரு பறவை பற்றையில் உள்ள இரண்டு பறவைகளுக்குச் சமன். கடந்த 20 வருடங்களாக நாம் பற்றையிலுள்ள பறவைகளைத் தேடி அலைந்து விட்டோம் ‘ என்பதே பீரிஸ் முன்வைத்த கருத்தாகும். இத்தகைய சாக்கடை சந்தர்ப்பவாத அரசியலில் எண்ணற்றவர்கள் இந்த நாட்டில் ஈடுபட்டு வந்துள்ளமையால் தான் நாடு அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கின்றது. இவர்கள் தூக்கி எறியப்பட வேண்டியவர்கள். நாளை ஆரம்பகமாகவுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காலக்கிரமத்தில் ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். அதற்கு முற்போக்கு சக்திகள் முன்னணியில் திகழ வேண்டும். நாளைய போராட்டத்தை முறியடிப்பதற்கு அரசாங்கம் விடுமுறை விளையாட்டு நடத்தினாலும் விரக்தியின் விளிம்பில் உள்ள மக்கள் ஆங்காங்கே திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உண்டு.

Exit mobile version