ஜப்பான் புகுஷிமா அணு உலை 3-இலிருந்து கதிர்வீச்சு அபாயம் பெருகியிருப்பதாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப வல்லுனர்களும் பணியாளர்களும் கதிர் வீச்சைக் கட்டுப்படுத்த போராடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ஒரு பகுதியிலிருந்து கதிர்வீச்சு தொடங்கியதாகவும் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அணு நிலையத்தின் மற்ற இடங்களில் வெப்ப நிலை உயர்வைக் கட்டுப்படுத்த கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஜப்பான் தலைமை நாடாளுமன்ற செயலர் யுகியோ எடானோ, அணு உலை 3-இலிருந்து ஹைட்ரஜன் வெடிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்தார்.
“மக்கள் குறித்த அச்சம் இருந்தாலும் மீண்டுமொரு வெடிப்பு ஏற்படும் என்ற சாத்தியத்தை நாம் மறுப்பதற்கில்லை, இருப்பினும் வெடிப்பு ஏற்பட்டாலும் மனித ஆரோக்கியத்தின் மீது இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று எடானோ கூறினார்.
இந்த அணு உலை வெடித்து அதிலிருந்து யுரேனியம், மற்றும் அபாயகரமான கதிர்வீச்சு ஏற்பட்டால் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பும், பரவலான ஆரோக்கியச் சீர்கேடுகளும் ஏற்படும் என்று நிபுணர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
அணு உலைக்கு அருகே உள்ள ஃபுடுபே என்ற ஊரில் 60 வயதான நோயாளிகள் உட்பட 160 பேர் வெளியேற்றப்பட காத்திருக்கின்றனர். மேலும் பேருந்தில் வெளியேறிய 100 பேரும் கதிர்வீச்சுக்கு பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இவர்கள் ஏற்கனவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஜப்பான அணு உலை ஆணையத்தின் ரியோ மியாகே தெரிவித்தார்.
இதற்கிடையே பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சென்டாய் நகரில் லட்சக்கணக்கானோர் குடிநீர், உணவு இல்லாமல் மீட்புப் பணியாளர்கள் அணுக முடியாத நிலையில் உள்ளதாகவும் தக்வல்கள் வந்துள்ளன.
பல இடங்களில் தண்ணீர் பெருமளவு சூழ்ந்திருப்பதால் மீட்புப் பணிக்குழு செல்ல முடியவில்லை. சுமார் 25 லட்சம் வீடுகளில் மின்சாரம் இல்லை.