2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம்தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநகரில் இருந்த இரட்டை கோபுரத்தை பயங்கரவாதிகள் விமானத் தாக்குதல் நடத்தி தகர்த்தனர். உலகையே உலுக்கிய இந்தத் தாக்குதலை தொடர்ந்து, பின் லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பை அழிக்கப் போவதாகவும், பின்லேடனை ஒழிக்கப்போவதாகவும் கூறி அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ஆப்கானிஸ்தானத்திற்கு எதிராக மிகப்பெரும் அளவிலான போரை தொடுத்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கானிஸ்தானத்தை முற்றிலும் சிதைத்த அமெரிக்கப் படையினர், பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களை குண்டு வீசிக் கொன்று குவித்தனர்.
அதன்பின்னர், கர்சாய் தலைமையில் ஒரு பொம்மை அரசு நிறுவப்பட்டது. கர்சாயின் ஆட்சி நடந்தாலும், ஆப்கானிஸ்தானை அமெரிக்கப் படைகளே கையில் வைத்திருக்கின்றன. கடந்த 8 ஆண்டு காலமாக பின்லேடனை பிடிக்கப் போவதாக கூறி நடத்தப்பட்ட இந்த கொடிய யுத்தத்தில், இதுவரையிலும் பின்லேடன் பிடிபடவில்லை; மாறாக, அமெரிக்காவின் யுத்தம் ஆப்கான் தாலிபான்களின் பயங்கர வாதத்தை பன்மடங்கு கூடுதலாக்கியிருக்கிறது. இவர்கள் அண்டை நாடான பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத் தையும் களமாகக் கொண்டு மிகப் பெரும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில், நிலைமையை மேலும் மோசமாக்கும்விதத்தில் ஒபாமா புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த 3 மாதகாலமாக தனது பாதுகாப்பு மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் நடத்திய நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், மேலும் 30 ஆயிரம் படையினரை ஆப்கனுக்கு அனுப்புவது என்று முடிவெடுத்திருப்பதாக ஒபாமா அறிவித்துள்ளார். இதற்கான உத்தரவை ஞாயிறன்று தனது இராணுவ தளபதிகளுக்கு பிறப்பித்தார். இது குறித்த தகவலை, இந்தியா உள்ளிட்ட தனது முக்கிய கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.
30 ஆயிரம் படையினரில் முதல் பிரிவினர், கிறிஸ்துமஸ் விழாவிற்கு முன்பு ஆப்கனுக்கு சென்றுவிடுவார்கள் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். படைக் குவிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள ஒபாமா, ஆப்கனிலிருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கான காலவரையறை எதையும் வெளியிடவில்லை. எனவே, ஒரு லட்சத் திற்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் நிரந்தரமாக ஆப்கனில் தங்குவதற்கான ஏற்பாட்டையே இதன் மூலம் ஒபாமா செய்கிறார் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஒபாமாவின் இந்த முடிவு, ஆப்கன் – பாகிஸ் தான் பிராந்தியத்தில் அமைதியின்மையையும், பயங்கரவாத நாசத்தையும் மேலும் தீவிரப் படுத்தவே செய்யும் என்றும் அவர்கள் கூறுகின் றனர்.