இந்த இரண்டு கருத்தோட்ட முன்னெடுப்புகளின் மூலம் அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சாரம் முழுக்கவும் சிங்கள பெளத்த அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட போகின்றது என்று தோன்றுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கட்சி தலைமைமையகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஜனநாயக இளைஞர் இணைய வாராந்திர அரசியல் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
பல இனங்கள் வாழும், பல மதங்கள் கடைபிடிக்கப்படும், பல மொழிகள் பேசப்படும் இந்த நாட்டின் பன்மை தன்மையை நிராகரித்து, இந்த நாட்டை ஒரு சிங்கள பெளத்த ராஜ்யமாக அறிவிக்கும் கொள்கை நிலைப்பாட்டை பொதுபல சேனா அதிகாரப்பூர்வமாக முன்னெடுகின்றது. இது இஸ்லாமிய பேரரசை உருவாக்க போகிறோம் என்று கூறி செயற்படும் ஐஎஸ்-ஐஎஸ் அடிப்படைவாதிகளின் போக்குக்கு சமானமானது.
ஒரு இனம், ஒரு மதம், ஒரு மொழி என்பது ஏனைய இனங்களையும், மதங்களையும், மொழிகளையும் பிரித்து வைக்கும் கொள்கையாகும். ஒரு இனம் என்றால் இரண்டு நாடு ஆகிறது. பல இனங்கள் என்றால் ஒரே நாடு ஆகிறது. ஆகவே ஒரு இன, மத அடிப்படையில் செயற்படும் பொதுபல சேனாவின் கொள்கை பிரிவினைவாத கொள்கை ஆகும். ஒரு காலத்தில் தமிழர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்லியவர்கள், இன்று தாமே பிரிவினை கொள்கையை முன்னெடுக்கின்றார்கள். அதேவேளை தமிழர்கள் ஐக்கிய இலங்கை கொள்கையை முன்னேடுக்கின்றோம்.
சர்வதேச விசாரணைதான் கட்டாயமாக வேண்டும் என்று சொல்லும் தரப்புகள் இந்நாட்டில் இருக்கின்றன. ஆனால் நாங்கள் ஒருபோதும் சர்வதேச விசாரணைதான் கட்டாயமாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை. ஆனால், சர்வதேச விசாரணை வேண்டாம்; நாம் உள்நாட்டில் நம்பக தன்மை வாய்ந்த விசாரணைகளை முன்னெடுக்கின்றோம் என்று நீங்கள்தான் ஐநா செயலாளர் நாயகத்துக்கு எழுத்து மூலம் உறுதி சொன்னீர்கள். அதுதான் இன்று பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது சர்வதேச விசாரணை வேண்டாம் என்ற கோஷத்தையும், சிங்கள பெளத்த பேரரசு என்ற கோஷத்தையும் முன்வைத்து கொண்டு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அரசாங்கம் சந்திக்க திட்டமிடுமானால், அது இந்த நாடு சந்திக்கும் மிகப்பெரும் தூரதிஷ்டமாகும். இது எதிரணிக்கு மட்டுமல்ல, அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் அனைத்து தமிழ், முஸ்லிம் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் சவாலாகும். இந்நிலையில் இதற்கு எதிராக இந்நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள வேண்டியது வரலாற்று கட்டாயமாகும்.