எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற இரண்டு பிரதான வேட்பாளர்களும், வெளிநாட்டு முகவர்களே விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குறித்த இரண்டு பிரதான வேட்பாளர்களும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்து கவனம் செலுத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் இருவரும் 13ம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாக கொண்டு சிறுபான்மை மக்களுக்கு தீர்வு வழங்குவதாக அறிவித்து வருகின்ற போதும், அது சாத்தியப்படப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கமும், பொன்சேகாவும் போலி பிரசாரம் செய்து வருவதாகவும், 13ம் திருத்தச் சட்டத்தில் இன்னும் விஸ்தரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இரண்டு பிரதான கட்சிகளும் பல காலங்கள் ஆட்சியில் இருந்த போதும், 13ம் திருத்தச் சட்டம் குறித்தோ, அல்லது சிறுபான்மை மக்களுக்கான தீர்வு குறித்தோ யோசிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப்பகிர்வுகள் மாகாணசபைகளின் ஊடாக பிரயோகப்படுகின்றன. எனினும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் இதன் கீழ் பகிரப்படவில்லை என மாகாணங்களின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த சட்டமுறைமை போதுமானது இல்லை என குறிப்பிட்ட அவர், தீர்க்கமான பாரிய அதிகாரப்பகிர்வுக்கான தேவை ஒன்று இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.