Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜனாதிபதியின் கொச்சைத் தமிழ் பேச்சினால், மட்டும் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை!:இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் .

11.11.2008.

ஜனாதிபதியின் கொச்சைத் தமிழ் பேச்சினால், மட்டும் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை. இந்த யுத்த குதூகலத்தை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தால் தமிழ், இஸ்லாமிய அகதிகளின் எண்ணிக்கை மேலும் பல இலட்சங்களாக அதிகரிக்கும்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியினாலும் வாழ்க்கைச் சுமையினாலும் தோட்ட முதலாளிமார்கள் அண்மைக் காலமாக மேற்கொண்டு வரும் ஆதாய நோக்கம் கொண்ட தொழில் மாற்றங்களிலும் 1/2 பட்டினி, 1/4 பட்டினி என அனுபவித்து அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களின் தலையில் பேரிடியாகப் போடப்பட்ட திட்டமாகவே தெரிகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக காலங் காலமாக உழைத்து வருகின்ற தொழிலாளர்களுக்கு எந்த விமோசனமும் வழங்காவிட்டாலும், அவர்களின் பராமரிப்பில் வாழ்கின்ற சிறுவர்களினதும் வயோதிபர்களினதும் அரை குறை சாப்பாட்டினைத் தட்டிப் பறிக்கின்ற இந்த வரவு செலவுத் திட்டம் உள்நாட்டு வெளிநாட்டு மக்களை திசை திருப்பும் ஒன்றாகவே மக்கள் கருதுகின்றனர்.

இவ்வாறு இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் இரா.தங்கவேல் பத்திரிகைக்கு விடுத்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தனதறிக்கையில்; ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியில் வீழ்ந்து தலைநிமிர முடியாத நிலைக்கு உந்தப்பட்டிருக்கும் இவ்வேளை 4 ஆவது பட்ஜெட் மேலும் மேலும் மக்களின் சுமையை அதிகரித்துள்ளதை தெள்ளத் தெளிவாக்கியுள்ளது. இந்த வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள காரணிகளையும் ஆலோசனைகளையும் ஆராய்ந்து பார்க்குமிடத்து இன வெறியர்களினதும் யுத்த வெறியர்களினதும் அபிலாசைகளை நிறைவேற்றி கொழுந்து விட்டெரியும் தமிழ் விரோத சக்திகளுக்கு உரமிடுவது போல் தோன்றுகிறது. இது ஆளுங் கட்சியின் கண் மூடித்தனமான யுத்த வெறியை முன்னெடுக்கும் விமல் வீரவன்சவின் பட்ஜெட் என கேட்கத் தோன்றுகிறது.

எனவே, இந்த வரவு செலவுத் திட்டத்தை தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டவர்களும் அதிக வாழ்க்கைச் செலவு உயர்வால் அவதியுறும் அனைத்து மக்களின் சார்பிலும் நாட்டில் சாந்தியும் சமாதானமும் தோற்றுவிக்க இயலாது என்பதை உணர்த்துகின்றது. இவ்விடயத்தில் தொழிலாளர்கள் மேலும் மேலும் நசுக்கப்படுவதை தவிர்ப்பதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் முன்வர வேண்டும் என்பதே இன்றைய நிலையெனவும் தெரிவித்துள்ளார்

 

Exit mobile version