தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள தமிழ்க் காங்கிரஸ் கட்சி, கூட்ட மைப்பு இவ்விடயத்தில் ஒரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் தனது முடிவை நேற்று எடுத்தது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் விசேட பொதுக் குழுக்கூட்டம் நேற்று முற்பகல் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் அ.விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது. சுமார் எழுபத்தியைந்து பேர் வரை அங்கு பிரசன்னமாகி யிருந்தனர். இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கான விளக்கங்கள், வியாக்கியானங்களை விவரிக்கும் அறிக்கை ஒன்றைக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அங்கு வாசித்தார்.
அந்த அறிக்கை பிரேரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதேபோன்று தேர்தலைப்பகிஷ்கரிக்கும் முடிவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டதாக அறியவந்தது. எனினும், தேர்தலைப் பகிஷ்கரிக்கும் முடிவுக்குத் தனிப்பட்ட முறையில் கட்சித் தலைவர் அ.விநாயகமூர்த்தி உடன்படவில்லை என்றும் தெரியவருகின்றது. எவ்வாறெனினும் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் விருப்பத்துக்கு அமைய பகிஷ்கரிப்பு முடிவு எடுக்கப்பட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் மூலம் அறியவந்தது.