Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரங்களைப் பயன்படுத்திய வன்முறைகள், அரச சொத்துக்கள் பயன்பாடு:கண்காணிப்பு நிலையம் கண்டனம்!

ஜனாதிபதித் தேர்தலில் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் 17 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் வன்முறைகளைத் தடுக்க முடியும் என நம்புவதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசார காலத்தில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாமை, அரச ஊடக துஷ்பிரயோகங்கள், தேர்தல் ஆணையாளரின் அதிகாரங்கள் மதிக்கப்படாமை, அதிகாரங்களைப் பயன்படுத்திய வன்முறைகள் போன்றவை நியாயமானதும் நேர்மையானதுமான தேர்தலைப் பாதிப்பதாக அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாளைய, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் இடைக்கால அறிக்கை குறித்து நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அந்நிலையத்தின் இணை அழைப்பாளர் பா.சரவணமுத்து இவ்விடயங்களை குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“கடந்த ஜனாதிபதித் தேர்தல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இம்முறை வன்முறைகள் அதிகரித்துள்ளன. அதிகாரமிக்கவர்களின் பலம் தேர்தல் காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அரச ஊடகங்களைக் கண்காணிக்கவென அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டபோதிலும் அவரால் தனது கடமையை சரிவரச் செய்ய முடியாமைக்கான பின்புலம் பற்றி நாம் தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்தாலோசித்தோம்.

நமது நாட்டில் 17ஆவது திருத்தச் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படுமானால் சுயாதீனமான ஆணைக்குழுக்களின் பரிபாலனம் மற்றும் செயற்பாடுகளினூடாக நியாயமான தேர்தல் நடத்தப்படுவதை எதிர்பார்க்க முடியும்.

சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகைகளை உடனடியாக நீக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார். எனினும் பெரும்பாலான இடங்களில் அவை அகற்றப்படவில்லை என எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.

இவை தொடர்பாகவும் ஏனைய வன்முறை முறைப்பாடுகள் தொடர்பாகவும் நாம் அடிக்கடி தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தி வந்தோம். வன்முறைகள், முறைகேடான சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் மக்களின் தீர்மானம் ஜனாதிபதித் தேர்தலில் வெளிப்படும் என நம்புகிறோம்” என்றார்.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் வடக்கு கிழக்குக்குப் பகுதிகளுக்கான இணைப்பாளர் எம்.எச்.எம். ஹஜ்மிர் கருத்து தெரிவிக்கையில்,

“எமது கணிப்பீட்டின் அடிப்படையில் சுமார் 80ஆயிரம் பேர் நலன்புரி கிராமங்களில் இருக்கின்ற போதும் 40ஆயிரம் பேர் மாத்திரமே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கா விட்டாலும் தமக்கு வாக்களிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும் என பெரும்பாலானோர் எண்ணியிருந்தனர்.

வடக்கு கிழக்கில் வாக்களிப்பு நிலையங்களைக் கண்காணிப்பதற்காக எமது விசேட குழுவினருடன் சர்வதேச கண்காணிப்பாளர்களும் தொண்டர்களும் பணியில் ஈடுபடுவார்கள்” என்றார்.

தனக்குரிய அதிகாரங்கள் பயன்படுத்தப்படுவதற்குத் தடையாக இருக்கும் நபர்கள், விடயங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றத்தினூடாக தீர்வொன்றைப் பெறமுடியுமல்லவா? என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த பா.சரவணமுத்து,

“இதுதொடர்பாக நாம் பல தடவை தேர்தல் ஆணையாளரிடம் கோரினோம். ஆனால் அது ஏனைய கட்சிகளுக்குச் சாதகமாக அமையும் என்பதால் ஆணையாளர் பதில் கூற மறுத்துவிட்டார். எனினும் இவ்விடயம் தொடர்பாக வேறு எவரேனும் நீதிமன்றுக்கு செல்லலாம்” என்றார்.

Exit mobile version