
நாட்டை சீரழித்து பொதுமக்களைப் படுபாதாளத்தில் தள்ளும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்கைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. இதனால் கட்சி பேதங்களை மறந்து எதிர்ப்புக் கூட்டத்தில் அனைவரும் பங்குபற்ற முன்வரவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்றும் பறிமுதல் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் வரவுசெலவுத்திட்டத்தை எதிர்த்தும் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நாளை செவ்வாய்க்கிழமை எதிர்ப்புக் கூட்டத்தினை நடத்தப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்ததுடன் இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஏனைய கட்சிகளுக்கும் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனையும் ஐக்கிய தேசியக் கட்சி அழைத்திருந்தது.
இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இனப்பிரச்சினை தீர்வு இழுத்தடிக்கப்படுதல் போன்ற விடயங்களும் எதிர்ப்புக் கூட்டத்திற்கான காரணங்களில் உள்ளடக்கப்பட வேண்டுமென்று மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிடம் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக மக்கள் முன்னணியும் எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்குமென்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று மனோ கணேசனை அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்றுக்காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் கலந்துகொண்டார்.
இதன்போது எதிர்ப்புக் கூட்டத்திற்கான காரணங்களில் அரசியல் கைதிகளின் விடுதலை, இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுவது என்பவற்றையும் இணைத்துக் கொள்வதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு மனோ கணேசன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள எதிர்ப்புக் கூட்டம் தொடர்பில் ஐ.தே.க.வின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது,
அரசியல் கைதிகளின் விவகாரம் நாட்டில் மேலோங்கியுள்ளது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் எவ்விதமான விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதைவிட அரசை விமர்சிப்பவர்கள் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு சிறை வைக்கப்படுகின்றனர். குறிப்பாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் சிறை வைப்பானது அரசின் தனிப்பட்ட பழிவாங்கலேயாகும்.
அதேபோன்று தான் புதிய பறிமுதல் சட்ட மூலத்தின் ஊடாக பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை பறிமுதல் செய்து அவற்றை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக்கப் போவதாக அரசு கூறுகின்றமை வேடிக்கையாக உள்ளது.
ஏனென்றால் இன்று மின்சார சபை, போக்குவரத்து மற்றும் புகையிரதம் உட்பட இன்னோரன்ன அரச நிறுவனங்கள் பாரிய நட்டத்தில் இயங்குகின்றன. இவற்றையே முறையாக நிர்வகித்துக் கொள்ள முடியாத அரசு எவ்வாறு தனியார் நிறுவனங்களை பாதுகாக்கப் போகின்றது. எனவே அரசாங்கம் போலித்தனமான காரணங்களைக் கூறி பொதுமக்களை வதைக்கின்றது.
வரவு செலவுத் திட்டமென்ற பெயரில் நாட்டு மக்களின் நிவாரண உதவிகளை அரசாங்கம் சூறையாடியுள்ளது. சர்வதேசத்திற்கு அடிபணியப் போவதில்லை என்று கூறிய அரசாங்கம் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் பொது மக்களுக்கான நிவாரணங்களை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே பிரதான காரணமாகும்.