Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஜனநாயக போராட்டத்தில் சிறை செல்வதற்கும் நான் தயார் : மனோ கணேசன்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஜனநாயக ரீதியாக நான் முன்னெடுத்துவருவதை சகித்துக்கொள்ள முடியாத விமல் வீரவன்ச எம்.பி., என்னை அரசாங்கம் கைது செய்து சிறையில் தள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ் இனத்திற்கான எனது ஜனநாயக போராட்டத்தில் சிறை செல்வதற்கும் நான் தயார் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. கூறிய கருத்துத் தொடர்பில் கொழும்பு நிப்போன் ஹொட்டலில் நடத்திய அவசர பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது:

நான் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின விழாவில் சமீபத்தில் கலந்துகொண்டதாகவும், தனிநாட்டை உருவாக்கும் நோக்கில் அரசியலமைப்பை நான் மீறியுள்ளதாகவும் விமல் வீரவன்ச நேற்று நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியுள்ளார். விமல் வீரவன்சவின் கூற்றை நான் அடியோடு மறுக்கின்றேன்.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான பொய்யான சோடிக்கப்பட்ட கட்டுக்கதையாகும். எனது அரசியல் அன்றும், இன்றும், என்றும் ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டதாகும். எங்களது நிகழ்ச்சி நிரலில் வன்முறைக்கும், பிரிவினைவாதத்திற்கும் இடமில்லை.

ஆனால், நாம் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே தமிழ் மக்களின் உள்ளக அரசியல் சுயநிர்ணய உரிமைக் கொள்கையை ஆதரிக்கின்றோம். தமிழ், சிங்கள, முஸ்லிம் தோழமை சக்திகளுடன் இணைந்து எமது இந்த நோக்கத்தை அடைவதற்காக ஜனநாயக ரீதியாக போராடுகின்றோம்.

இது எங்களது பகிரங்க நிலைப்பாடு. இதில் மறைப்பதற்கு எதுவும் கிடையாது. தமிழ் பேசும் மக்களின் தேசிய உரிமைகளை எப்போதும் நிராகரிக்கும் பேரினவாதியான விமல் வீரவன்சவிற்கு எங்களது ஜனநாயக செயற்பாட்டை சகித்துக்கொள்ள முடியவில்லை.

அரசியல் அமைப்பு பற்றியும், மாவீரர் நிகழ்வுகளை பற்றியும், ஆயுத வன்முறை கலாசாரத்தை பற்றியும் கருத்து தெரிவிப்பதற்கு இந்த விமல் வீரவன்சவிற்கு என்ன தகுதி இருக்கின்றது? நான் எனது அரசியலை அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பொலிஸ் நிலையத்திற்கு கைக்குண்டு எறிந்துவிட்டு ஆரம்பிக்கவில்லை.

புலிகள் இயக்கத்திற்கு முன்னரே 1989ஆம் வருடத்திலேயே கண்டி புனித தலதா மாளிகையை தாக்கி கொள்ளையடிக்கவில்லை. பாராளுமன்றத்தில் நடைபெற்ற அரசாங்க கட்சிக் குழுக்கூட்டத்திற்கு கைக்குண்டை கொண்டு சென்று வீசி பாராளுமன்ற உறுப்பினர் கீர்த்தி அபயவிக்கிரமவை கொலை செய்துவிட்டு, நாட்டின் அன்றைய தினத்தின் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை படுகொலை செய்ய முயற்சிக்கவில்லை. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிச் சிங்கள இளைஞர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கவில்லை

Exit mobile version