வன்னி மக்கள் மீதான இனக்கொலை போர் நடந்த போது மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அதைக் கண்டும் காணாமல் அமைதியாகவே இருந்தது. வரதராஜன் போன்ற தமிழக மார்க்ஸ்சிஸ்ட் தலைவர்களோ போரை ஆதரித்து வெளிப்படையாகவே பேசியிருந்தனர். இது தமிழகத்தில் மார்க்ஸ்சிஸ்டுகள் மீதும் கடுமையான விமர்சனங்களை உண்டு பண்ண எழுபதாயிரம் மக்கள் இனக்கொலையாகி அங்கே மயான அமைதி ஏற்பட்ட பின்பு நாங்களும் இலங்கைப் பிரச்சனையில் ஆர்வம் உள்ளவர்கள்தான் என்று களத்தில் குதித்துள்ளனர் சி.பி.எம் கட்சியினர். சென்னையில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று பிரகாஷ் காரத் பேசியது: இலங்கையில் போர் முடிந்து ஓராண்டாகிறது. அந்த நாட்டில் ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்ல இப்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து இலங்கையில் அரசியல் தலைவர்கள் பேசி வந்தனர். ஆனால், போரில் இலங்கைக்கு கிடைத்த ராணுவ வெற்றி, அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை இரண்டு முக்கியமானப் பிரச்னைகள் இப்போது உள்ளன. தமிழர் பகுதிகளில் மீண்டும் சகஜ நிலையை ஏற்படுத்த வேண்டும். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு தொடர்பாக பேசியுள்ள ராஜபட்ச, போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும் மீண்டும் அவர்களது பகுதிகளில் குடியமர்த்த மேலும் 3 மாதம் ஆகும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, இந்த ஆண்டு ஜனவரிக்குள் அனைத்துத் தமிழர்களும் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அவர் தெரிவித்திருந்தது குறிóப்பிடத்தக்கது. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்கும் வகையில் அரசியல் சட்டத்தை சீரமைக்க வேண்டும். இலங்கையில் உள்ள சிங்களர்கள் மற்றும் தமிழர்களின் அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வை நோக்கி பணியாற்ற வேண்டும். பிரச்னைகளை ஜனநாயக ரீதியில் பேசித் தீர்ப்பதற்கு பொதுவான தளம் உருவாக்கப்பட வேண்டும். ராஜபட்ச இந்தியாவுக்கு ஜூன் 8-ம் தேதி வருகிறார். அப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு விரைந்து மறுவாழ்வு அளிக்கவும், இந்தப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணவும் ராஜபட்சவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றார் பிரகாஷ் காரத் வழக்கம் போல இனக்கொலைக்கு துணை போன இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்து முடித்துக் கொண்டார்.