Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ச. விசயலட்சுமி கவிதைகள்.

 

1

ஊதா நிறம் தெறிக்கும்
மாலை வேளைகளில்
சந்திப்பின் விருப்பங்களுடன்
நிரம்புமவன் குறுஞ்செய்திகளில்
சிறு குழந்தையின் பிடிவாதம்

தவிர்த்தும் மறுத்தும் கழிந்த
சில நாட்களுக்குப்பின்
தற்செயலாய் சந்தித்துக் கொண்டோம்

விரையும் நகரப் பேருந்தொன்றில்
வெக்கை மிகுந்த அப்பிற்பகலில்
காலியிறுக்கைகள் பெரும்பகுதியாய்க் கிடந்த
உணவகத்தில்
தயாரிப்புகளின்றி
கசிந்தது உரையாடல்

நுரைக்கும் தாய்மையை
பழரசக் குவளைகளில்
நிரப்பிக் கொடுத்தவளை
வெறிக்குமவன் பார்வையில்
வேட்டைப் புலிகளின் தீவிரம்
தவறி விழும் அலைபேசியை
கைப்பற்ற எந்தனிக்கும் கனத்தில்
இடம் மாறிப் போகின்றன
குவளைகள்

இன்னும் சில துளிகளை
இருவருமாய் பருகியபின்
துவர்ப்புச் சுவை மிகுந்திருக்கிறதென்றான்

பொம்மைகளுக்காகவும்
சாக்லெட்டுகளுக்காகவும்
அடம்பிடிக்கும் குழந்தையென
அவனைச் சொன்னவளிடமிருந்து
மௌனித்து முகம் திருப்பிக் கொள்கிறான்

தகிக்குமவன் மரகதயாழ்
காதலை இசைக்கிறது
கொற்றவையின் உக்கிரக் கண்களில்
தாய்மை கசிகிறது

                                                                                                       2
பாலை வனத்தின்
நெடுஞ்சாலை இருளென
நீண்டு கிடக்கும் மனவெளியில்
தனிமையின் நாடகங்கள்

புறவெளியின் உறவுகளை
மிச்சம் வைக்காது
தின்று செரிக்கும்
வெளிப்படுத்தியிரா உரையாடல்கள்

சிறு சதுரங்களில் அடைபடும்
காற்றென
ஒற்றை நாடியாய்
பருமனாய்
குள்ளமாய்
வடிவமற்று சுழலும்
முக்காலங்களும்

 

நுண்மையும் நோய்மையும் கொண்டு
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
கழியும் பொழுதுகளில்
சாத்தப்பட்டிருக்கின்றன
அகமனதின் கதவுகள்

சில நொடிகளில் 
கண்டுபிடிக்க முடிகிற சுயம்
மறைந்து போகும்
அதே வேகத்தில்

பிரிவின் கொந்தளிப்பு மிகுதியில்
நெளியும்
அலையாத்திச் செடிகளில்
கரையும் நீர்மை

முன்பொரு நாள் இரவில் காத்திருந்த
சிறு துண்டுக் காதலின்
எல்லா துகள்களிலும்
தேங்கிக் கிடக்கின்றன

ஊதிர்க்கவியலா
கண்ணீர்த் துளிகளும்
சொல்ல மாளாத பெருந்தனிமையும்

 

                                                                                                      3.
தானியங்களை சிதறடித்துவிட்டு
குரங்கொன்று சீண்டிய வண்ணமிருந்து

பாதையை அடைத்துக் கொண்டு
சப்தம் எழுப்பிக் குதித்ததில்
பார்வைகளை கவ்வியது மருட்சி

செய்கை புரிந்து
தடவிக் கொடுத்ததும்
மெல்ல உறங்கியது

உறக்கம் தெளிந்தபின்
மலையோ மணலோ காடோ செல்லுமிடமெல்லாம்
அணுவளவும் பிரியாமல் தொடர்ந்தது

கட்டுப்படுத்தி விடுகிற
நம்பிக்கையில் கம்பெடுத்துக் கொள்கிறேன்
குரங்காட்டியாகி

பிடிவாதங்களுக்குப் பழகிப்போன
அதன் பிரயத்தனம்
தன்னை குரங்காட்டியாய்
மாற்றிக் கொள்வதிலிருந்தது
நான் குரங்காகியிருந்தேன்

வறண்ட நிலத்தின்
வெயிலப்பிய பின் மாலையில்
தாவிக் குதித்துக் கொண்டிருக்கிறேன்
இப்படியும் அப்படியுமாய்

– ச. விசயலட்சுமி

Exit mobile version