Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சோமாலிய கடற்கொள்ளையர்களை ஒடுக்க தரை, வான்வழித் தாக்குதல் நடத்தலாம்: ஐ.நா

17.12.2008.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை ஒடுக்க, அவர்களின் நிலைகள் மீது ஆப்ரிக்க கடல்பகுதியில் உள்ள நாடுகள் தரை, வான்வழித் தாக்குதல்கள் நடத்தலாம் என ஐ.நா பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது.

கடந்த 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்காவில் ஐ.நா.வின் அமைதிப் படையை அனுப்பும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு அளித்த நிலையில், இந்த அறிவிப்பை ஐ.நா பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ளது.

ஆப்ரிக்காவின் பெரும்பாலான தெற்குப் பகுதி இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக ஐ.நா. அங்கீகரித்த அரசுகள் அப்பகுதியில் செயல்பட முடியாமல் திணறி வருகின்றன.

கடந்த சில மாதங்களாக சோமாலிய கடற்கொள்ளையர்கள் சூயஸ் கால்வாய்க்கு செல்லும் சரக்குக் கப்பல்களை கடத்தி, அதில் உள்ள மாலுமிகளை பிணையக் கைதிகளாக பிடித்து, சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள், அரசுகளிடம் பெருந்தொகையை வழங்க மிரட்டல் விடுத்தது நினைவில் கொள்ளத்தக்கது.

இதையடுத்து சோமாலிய கடற்கொள்ளையர்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள அரசுகள் வான், தரைவழித் தாக்குதல் நடத்த அனுமதி அளிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் அனுமதியை அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வரவேற்றுள்ளார்.

நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய ரைஸ், கடற்கொள்ளையர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேம்படுத்த அமெ‌ரி‌க்கா ஒரு தொடர்புக் குழுவை நியமிக்க உள்ளதாக கூறியதுடன், இந்தாண்டுக்குள் ஐ.நா பாதுகாப்பு படைகள் அங்கு அனுப்பப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் அங்கேற்ற இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், ரைஸின் கருத்தை ஆமோதித்தாலும், ஆப்ரிக்காவில் நிலவும் தற்போதைய பாதுகாப்பற்ற சூழலில் அமைதிப் படையை அங்கு அனுப்புவதால் உரிய பலன் கிடைக்காது என ஐ.நா அலுவலர்கள் கருதுகின்றனர்.

எனவே, இச்சூழலில் பாதுகாப்பு படையினரை அங்கு அனுப்புவது பலத்த சர்ச்சையை எழுப்பும் எனக் கருதிய ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன், அதற்கு முன்பாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சர்வதேச நாடுகளின் படைகளுக்கு வான், தரைவழித் தாக்குதல் நடத்த உத்தரவு வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version