11.12.2008.
சோமாலியாவின் நிலைமையில் வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை காணப்படுவதாக ஐ.நா.அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்திருக்கிறார். உலக உணவுத்திட்ட அதிகாரியான ஜோன் காம்பெல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான தருமபுரத்திலிருந்து பிரிட்டிஷ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் சிங்கள சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் மோசமான நிலைமையை சோமாலியாவுடன் சமாந்தரப்படுத்தியுள்ளார்.
தருமபுரத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அடிப்படை வசதிகளற்ற புகலிடங்களில் தங்கியுள்ளதாகவும் அண்மைய மழையினால் நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும் காம்பெல் கூறியுள்ளார்.
அவர்கள் தண்ணீரால் சூழப்பட்ட முகாம்களிலேயே தங்கியுள்ளதுடன் உணவுக்காக சர்வதேச உதவியிலேயே முழுமையாகத் தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்கள் நிலைமை மிகவும் துன்பகரமாக இருக்கின்றபோதும் அவர்களுக்குப் போதிய உணவு வழங்கப்படவேண்டியது அவசியம் என்றும் காம்பெல் வலியுறுத்தியுள்ளார்.
சோமாலியாவின் தான் இருந்தபோது பார்த்த நிலைமையே இங்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1991 இல் சோமாலியாவில் ஜனாதிபதி சியாட்பரேயின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின்னர் அங்கு செயற்பாட்டுத்திறனுடனான மத்திய அரசாங்கம் இல்லை. அங்கு பல ஆயுதக் குழுக்கள் போராடுகின்றன. பஞ்சம், நோய் என்பவற்றால் 10 இலட்சம் மக்கள்வரை அங்கு மாண்டுவிட்டனர்.
வன்னியில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா.மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
50 உணவு லொறிகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வன்னிக்கு ஐ.நா.ஊடாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அரிசி, மா, பாடசாலை உபகரணங்கள் என்பனவே கொண்டு செல்லப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களில் ஏழாவது தடவையாக இப்பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக காம்பெல் கூறியுள்ளார்.