அந்த தொலைக்காட்சியில் அண்மையில் வெளியான ஒரு செய்தி தொகுப்பில், சோனியா காந்தி சர்வாதிகாரி போல் செயல்பட்டு வருவதாக விமர்சிக்கப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மன்மோகன் சிங் சோனியாவின் கைப்பாவையாக மாறிவிட்டதாகவும் அதில் கூறப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான தொலைக்காட்சியில் இதுபோன்ற செய்தி வெளியானது ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அந்த தொலைக்காட்சி அலுவலகத்தின் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர்.
சோனியாவையும், பிரதமரையும் அவமதித்த ஜெகன்மோகனை காங்கிரசில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
சோனியா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கி ஆந்திர முதலமைச்சராக 2 முறை பதவி ஏற்ற ராஜசேகர ரெட்டி மகனாக இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஜெகன்மோகன் செயல்படுவது வேதனை அளிப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தபோது முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக ரோசையா அப்பதவியில் அமர்த்தப்பட்டார்.
அன்று முதல் அதிருப்தியில் இருந்த ஜெகன்மோகன், தமது தொலைக்காட்சி மூலம் சோனியா, மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருப்பது ஆந்திர மாநில அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.