திருநெல்வேலி பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் செவ்வாய்க்கிழமை இரவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் கட்சி நிதியளிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் ஆர். சண்முகவேல் தலைமை வகித்தார். தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி. லிங்கம், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏ. சேவியர், பி.என். இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தா. பாண்டியன் பேசியதாவது: இந்திய கம்யூனிஸ்ட்டும், மார்க்சீய கம்யூனிஸ்ட்டும் இணைந்து செயல்பட்டால் தான் பாட்டாளி வர்க்கம் பாதுகாப்பாக இருக்க முடியும். அண்மைக்காலமாக தமிழகம் தனது அடையாளத்தை இழந்து வருகிறது. அந்த அடையாளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கும், பாதுகாப்பதற்கும் நமக்கு கடமை உண்டு. தமிழக முதல்வர் கருணாநிதியால் மின்சார தட்டுப்பாடு, குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியவில்லை. ஆனால் அவர், செம்மொழி மாநாடு நடத்துகிறார். இச் சூழ்நிலையில் செம்மொழி மாநாடு தேவையில்லை. இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை உலக நாடுகள் அனைத்தும் கண்டித்துள்ளன. ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என சில நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இது வரை இலங்கையில் நடைபெற்றுள்ள இனப்படுகொலையை இந்திய அரசு ஒருமுறை முறை கூட கண்டிக்கவில்லை. மாறாக தில்லி வந்த ராஜபட்சவை சிவப்பு கம்பளம் விரித்து இந்திய அரசு வரவேற்றது வேதனைக்குரியது என்றார் பாண்டியன்.