ராஜபட்சேவின் வருகைக்கு எதிராக எந்த விதமான எதிர்ப்புப் போராட்டங்களுக்குக்கும் தமிழக போலீஸ் அனுமதியளிக்கவில்லை. என்ற நிலையில் தடையை மீறி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சென்னையின் பல் வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கைதுசெய்யப்பட்டவர்கள் பல்வேறு சமூக நலக்கூடங்களிலும் திருமண மண்டபங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வைகோ, நெடுமாறன், சி.மகேந்திரன், நல்லக்கண்ணு, போன்றோர் மயிலாப்பூரிலும் சீமான் நுங்கம்பாக்கத்திலும் திருமாவளவன் உள்ளிட்டோர் மெமோரியல் ஹால் பகுதியிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர். இவர்கள் ஆங்காங்கு இருந்து இலங்கைத் தூதரகம் நோக்கி ஊர்வலமாகச் செல்லக் கிளம்பிய போது கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுக்க பல்லாயிரக்கணக்கில் கைது
சென்னைக்கு வெளியிலும் கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலும் ராஜபட்சேவின் வருகைக்கு எதிராக மதிமுக, இலங்கைத் தமிழர் பாதுகாப்பியக்கம், உள்ளிட்ட ஏராளமான தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம், திருச்சி, தஞ்சை, மதுரை, திருவண்ணாமலை, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், தேனி, சிவகங்கை, மயிலாடுதுறை என எல்லா பகுதிகளிலும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். சுமார் ஐந்தாயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இலங்கைத் தூதரகத்திற்கு மிக உச்சக்கட்ட பாதுகாப்பை வழங்கியுள்ளது மாநில அரசு.
திமுக- ராஜபட்சே சந்திப்பு
…………………………………………
மீள்கட்டுமானத் திட்டங்கள் தொடர்பாக திமுக தலைமையிலான நாடாளுமன்றக் குழுவினர் ராஜபட்சேவைச் சந்திக்க டில்லி விரைந்துள்ளனர். இந்தக் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. தமிழகம் முழுக்க பரவலாக எழுந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாது இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்பதோடு, திமுகவின் மூத்த தலைவர்களுக்கும் இலங்கையில் தொழில் முதலீடுகள் குறித்த ஆர்வமும் ஏற்பட்டிருப்பதாகவும். திமுகவின் ஒரு முக்கியப் புள்ளிக்கு திருகோணமலைத் துறைமுகத்தில் மிகப்பெரிய அளவிலான காண்டிராக்ட்களை பெற்றுக் கொள்ளும் படியான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது.