Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

செஞ்சிலுவைச் சங்கத் திட்டத்தில் பிள்ளையான் குழு இணைப்பு

இலங்கையின் மோதல்களின் போது சர்வதேச மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் நடத்தப்படும் விழிப்புணர்வு செயற்திட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து 2004ஆம் ஆண்டு கருணா தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பிரிந்துசெல்லும் போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் சர்வதேச மனித உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைச் சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்திட்டத்தில், அரசியல் கட்சியாக உருவாகியிருக்கம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தச் செயற்திட்டமானது, ஆயுதக் குழுவொன்று கிழக்கில் ஆயுதங்களுடன் நடமாடுவதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என அர்த்தப்படாதென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை அறிந்துகொள்வது பற்றி 20 கட்டங்களாக இந்த விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசாங்கப் படையினர் உட்பட 1200 பேர் இந்தச் செயற்திட்டத்தில் கலந்துகொண்டிருப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜயரட்ன கூறினார்.

ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இவ்வாறான 80 செயற்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்தச் செயற்திட்டங்களை பாதுகாப்புத் தரப்பினர் வரவேற்றிருப்பதுடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமக்கிடையிலான ஒழுக்கக் கோவைகளை வகுப்பதற்கு இது உதவியாக இருக்குமெனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Exit mobile version