செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 32 அகதிகள் தற்போது உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் இருக்கும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தங்களை சேர்க்க வலியுறுத்தி, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, 22 அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 15 பேரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வரும், விக்ரம் சிங்கிடம், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் செல்லப்பா, தாசில்தார் வெங்கடேசன், கியூ பிராஞ்ச் டி.எஸ்.பி பாண்டியன், காவல்துறை ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இவற்றை ஜூன் 5ஈம் தேதிக்குள் நிறைவேற்றுவதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக விக்ரம் சிங் தெரிவித்தார்.