பலநாடுகளின் அரசு சார் ரகசிய உத்தரவு கேபிள்களை உலகிற்கு வெளிப்படுத்திய விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சிடம் சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு வைத்துள்ள 2000 பேர்களின் விவரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
ருடால்ஃப் எல்மர் என்ற முன்னாள் சுவிஸ் வங்கி அதிகாரி 2000 ரகசிய வங்கிக் கணக்குகள் அடங்கிய வட்டுகளை அசாஞ்சிடம் கையளித்தார்.
இந்த 2000 கணக்குகளில் இந்தியத் தொழிலதிபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கணக்குகள் இருக்குமா என்பதில்தான் இப்போது ஆர்வம் பிறந்துள்ளது.
1990ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை சுவிஸ் வங்கியில் கணக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பலநாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், செல்வந்தர்கள், நிதிநிறுவனங்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் விவரங்கள் இந்த வட்டுகளில் இடம்பெற்றிருப்பதாக சுவிட்சர்லாந்து பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
“நான் சுவிஸ் வங்கி கணக்கிற்கு எதிரானவன், அங்கு எவ்வாறு அனைத்தும் நிகழ்கிறது என்பதை நான் அறிவேன். ஒரு பெரிய வலைப்பின்னலே இந்த சட்டவிரோத கணக்குகளை உருவாக்குவதில் செயல்பட்டு வருகிறது.
நான் அங்கு வேலை செய்துள்ளேன், அங்கு தினசரி வர்த்தக நடவடிக்கைகள் என்னவென்பது எனக்கு முழுதும் தெரியும்.” என்று எல்மர் லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த 2000 ரகசிய கணக்குகளில் 40 அரசியல்வாதிகளின் கணக்குகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது